
விஜய் சேதுபதியைத் தனிப்பட்ட முறையில் யாரும் தாக்க வேண்டாம் என்று இயக்குநர் சீனு ராமசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
ஒரு தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிவரும் நடிகர் விஜய் சேதுபதி பேசியது, முதலமைச்சர் விஜய்யின் தலைமைப் பண்பைப் பற்றிதான் என்று குற்றம்சாட்டி த.வெ.க.வினர் சமூக ஊடகங்களில் கடுமையாகத் திட்டிவருகின்றனர்.
அதைத் தொடர்ந்து, பல்வேறு தரப்பினரும் விஜய் சேதுபதிக்கு ஆதரவாகப் பேசி வருகின்றனர்.
இதுகுறித்து இயக்குநர் சீனு ராமசாமி வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவானது:
"விஜய் சேதுபதியை உள்ளும் புறமும் நன்கறிவேன். எதையும் நேர்பட கண்கள் பார்த்து சொல்லக்கூடிய மனிதன்; மறைந்திருந்து தாக்கும் குணம் கொண்ட மனிதன் அல்ல.
உண்மையில் தமிழக சட்டசபை நிகழ்ச்சிகளை மக்கள் அதிகமாகப் பார்க்கிறார்கள். மற்ற ஓடிடி, சினிமா, இணையதளச் செயல்பாடுகள் எல்லாம் சட்டசபைக் காலங்களிலே மந்தமாகிவிட்டது, இதுதான் உண்மை.
பிக்பாஸ் நிகழ்ச்சியை கொஞ்சம் அரசியல் சாயம் பூசி விட்டால் மக்களின் கவனத்தைப் பெற்றுவிடலாம் என்று அதை நடத்துபவர்கள் நினைத்திருக்கலாம்.
ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் சொல்லப்படும் ஒரு வசனத்தை எடுத்துக்கொண்டு இவ்வளவு சீரியஸாக ரியாக்ட் பண்ண வேண்டிய அவசியம் இல்லை என்று நான் நினைக்கிறேன்.
அதை வைத்து அவரைத் தனிப்பட்ட முறையில் தாக்குவது என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது.
இன்று இந்தியா முழுக்க நன்கறிந்த பெருமைக்குரிய கலைஞன் சேது. புதியவர்களை ஊக்கப்படுத்த பல படங்களில் கெஸ்ட் ரோல் நடித்தவர், பல படங்கள் சிக்கலில் இருந்தபோது தன் சம்பளத்தை விட்டுக்கொடுத்து உதவியவர்.
முன்பின் தெரியாத பலருக்கும் நன்மைகள் செய்த மனிதன் விஜய் சேதுபதி. ஆகவே அவசரப்பட்டு தனிப்பட்ட முறையில் அவரை யாரும் தாக்க வேண்டாம்." என்று சீனு ராமசாமி வலியுறுத்தியுள்ளார்.