“விசில் அடித்துவிடாதீர்கள்… ஓட்டுப் போய்விடும்...!”
தூங்கிக் கொண்டிருப்பவர்களின் காதுகளில் சென்று விசில் அடித்துவிடாதீர்கள்; ஓட்டுப் போய்விடும் என தவெகவினருக்கு செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மாமல்லபுரத்தில் நடைபெறும் செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் பேசுகையில், “இங்கே எல்லார் கையிலும் விசில் வைத்திருக்கிறீர்கள். நாளை காவலர்கள், நடத்துனர்கள் கூட விசில் வைக்க முடியாத நிலையை ஏற்படுத்துவார்கள். இரண்டு நாளைக்கு முன்பாக ஒரு கூட்டம். தலைக்கு 1000 ரூபாய் கொடுத்து கூட்டி வந்திருந்தார்கள். அவர்கள் திமுகவை வீழ்த்துவோம் என்றார்கள். ஒருவரும் கைத்தட்டவில்லை. திமுகவை வீழ்த்தும் சக்தி நம் தலைவருக்குதான் உண்டு. 10 கட்சி கூட்டணி 15 கூட்டணியையெல்லாம் முறியடிக்கும் சக்தி தலைவருக்குதான் உண்டு.
இந்திய வரலாற்றில் யாருக்குமே இல்லாத புகழ் நம் தலைவருக்கு இருக்கிறது. 1000 கோடி வருவாயை வேண்டாமென்று கூறிவிட்டு அவர் மக்களுக்காக வந்திருக்கிறார்.
ஒவ்வொரு வீட்டிலும் நமக்கு ஓட்டு இருக்கிறது. திமுகக்காரர்களின் வீட்டு ஓட்டு கூட நமக்குதான் இருக்கிறது.அந்த இரு கட்சிகளிலும் இருப்பவர்கள் தலைவர்களே அல்ல. நம்முடைய தலைவரை முதல்வராக்க வேண்டுமென மக்கள் சூளுரைத்திருக்கின்றனர். எந்த சக்தியாலும் நம்மை இனி தடுத்து நிறுத்த முடியாது. நம்முடைய சின்னம் விசில் சின்னம். தூங்குகிறவர்களின் காதுகளில் விசில் அடித்து விடாதீர்கள். முதியவர்களின் முன்னால் விசில் அடித்துவிடாதீர்கள். வாக்கு கிடைக்காமல் போய்விடும்' என்றார்.
த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் செயல் வீரர்கள் கூட்டம் மாமல்ல புரத்தில் இன்று தொடங்கியது. தவெகவிற்கு விசில் சின்னம் கிடைத்தபிறகு நடைபெறும் முதல் கூட்டத்தில் செங்கோட்டையன், என்.ஆனந்த் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தின் தொட க்கமாக மொழிப்போர் தியாகிகளுக்கு விஜய் மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து கொள்கைத் தலைவர்களுக்கு விஜய் மலர் தூவி மரியாதை செய்தார். முன்னதாக விஜய் மேடைக்கு வரும்போது, தொண்டர்கள் அவருக்கு விசில் அடித்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர். கடந்த டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பிறகு, மீண்டும் கட்சி நிகழ்வில் விஜய் உரையாற்றவுள்ளதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

