‘மரங்கள் மீது ஏறக் கூடாது’ - தொண்டர்களுக்கு தவெக தலைமை அறிவுறுத்தல்!

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்
Published on

விஜய் பிரசார பயணத்துக்கு பிளக்ஸ் பேனர் வைக்க வேண்டாம் என தமிழக வெற்றிக் கழகப் பொதுச் செயலர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டுள்ளார். அந்த பயணத்தை நாளை திருச்சியிலிருந்து தொடங்குகிறார்.

மக்களைச் சந்திக்கும் விஜய், திறந்த வெளி வாகனத்தில் பேசவிருப்பதால், அவரின் சுற்றுப்பயணத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலர் ஆனந்த் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நம் வெற்றித் தலைவர் விஜய், நாளை (செப்.13) முதல் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப் பயணம் செய்து, தொடர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை மேற்கொள்ள உள்ளார் என்பதை அனைவரும் அறிவீர்கள்.

தமிழக வெற்றிக் கழகம், தகுதி மற்றும் பொறுப்பு மிக்க ஓர் அரசியல் பேரியக்கம் என்பதை நமது ஒவ்வொரு செயலிலும் காட்ட வேண்டியது நமது தலையாய கடமை. நம் தலைவர் அவர்கள் மீது நீங்கள் கொண்டிருக்கும் எல்லையில்லா அன்பினால் மனம் நெகிழ்ந்துள்ள அவர் இந்தச் சுற்றுப் பயணத்தின்போது உங்களைச் சந்திப்பதற்கு மிகவும் ஆவலாக இருக்கிறார்.

ஆனாலும் தமிழக மக்களை உயிராகப் போற்றி மதிக்கும் அவர் தன்னை நேசிக்கும் மக்களின் பாதுகாப்பில் எள்ளளவும் சமரசம் செய்துகொள்ளாதவர். எனவே நம் வெற்றித் தலைவர் அவர்களின் இந்த மக்கள் சந்திப்புச் சுற்றுப் பயணத்தின்போது கழகத் தோழர்களும் பொதுமக்களும் பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கழகத் தலைவரின் ஒப்புதலோடு கேட்டுக்கொள்கிறோம்.

1. நம் தலைவர் அவர்கள் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வரும் போதும், நிகழ்ச்சியை முடித்துவிட்டுச் செல்லும் போதும் அவரது வாகனத்தை யாரும் இருசக்கர வாகங்களில் அல்லது வேறு வாகனங்களில் பின்தொடர வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

2. கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறுவர், சிறுமியர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்த்து, வீட்டில் இருந்தபடியே நேரலையில் கண்டு மகிழுமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

3. நம் கழகத் தலைவர் இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளின் போதும், தலைவர் வருகை உள்ளிட்டவற்றின் போதும் கழகத் தோழர்கள் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

4. காவல்துறையின் அறிவுறுத்தலின்படி, அனைத்து வகையான வரவேற்பு நடவடிக்கைகளையும் கழகத் தோழர்கள் தவிர்க்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.

5. வாகனங்களை நிறுத்தும் பொழுது, பிறருக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் நிறுத்த வேண்டும். போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக, கண்டிப்பாக வாகனங்களை நிறுத்தக் கூடாது.

6. தலைவரின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வரும் நாம் அனைவரும் சகோதர சகோதரிகளே! இதைக் கருத்தில் கொண்டு பிறர் மனம் புண்படும் வகையில் பேசுவதோ அல்லது நடந்துகொள்வதோ கண்டிப்பாகக் கூடாது.

7. தலைவரின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் இடங்களிலோ அல்லது அங்கே செல்வது மற்றும் திரும்பி வருவது உள்ளிட்ட வழிகளிலோ சட்டம் ஒழுங்கைப் பேணிப் பாதுகாக்க உதவும் வண்ணம் மிகவும் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும்.

நம் கழகத்திற்கு அவப்பெயரை உண்டாக்கும் உள்நோக்கம் கொண்டு யாரேனும் செயல்பட முற்பட்டால், அதற்கு இடம் கொடாதவாறு கவனத்துடன் செயல்பட வேண்டும்.

8. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டடங்கள், காம்பவுண்ட் சுவர்கள், மரங்கள், மின் விளக்குக் கம்பங்கள் (EB Lamp Posts), மின் கம்பங்கள் (EB Posts), மின்மாற்றிகள் (EB Transformers), வாகனங்கள் (பஸ், வேன், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள்), கொடிக் கம்பங்கள், சிலைகள் ஏதேனும் இருந்தால் அதனைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கிரில் கம்பிகள் மற்றும் தடுப்புகள் ஆகியவற்றின் அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

9. மாண்பமை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, தேசிய நெடுஞ்சாலைகளிலும், பிற சாலைகளிலும், நெடுஞ்சாலை/இதர சாலைகளின் இருபுறங்களிலும் பிளக்ஸ் பேனரோ. அலங்கார வளைவுகளோ, கொடி கட்டப்பட்ட கம்பிகளோ உரிய அனுமதி பெறாமல் வைக்கக் கூடாது.

10. தலைவரின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது, அப்பகுதிகளில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும் பொது மக்களுக்கும் வாகன ஒட்டிகளுக்கும். மாணாக்கர்களுக்கும், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கும் எவ்விதப் போக்குவரத்து இடையூறும் ஏற்படாத வகையில் கலந்துகொள்ள வேண்டும்” என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com