‘சிவகங்கைக்கு வராதே’ – ஓ.பி.எஸ்.-க்கு எதிராக சர்ச்சை போஸ்டர்!
‘சிவகங்கை மாவட்டத்திற்கு வராதே’ என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பி.எஸ். வெளியேற்றப்பட்ட பிறகு, அவர் கட்சியை கைப்பற்ற சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார். ஆனால், நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என எல்லா இடங்களிலும் பின்னடைவைச் சந்தித்து வந்த நிலையில், தற்போது டி.டி.வி. தினகரனுடன் இணைந்து செயல்பட உள்ளதாகவும், மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வுடன் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தனது ஆதரவாளர்களைச் சந்திக்க பன்னீர்செல்வம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாகச் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனது ஆதரவாளர்களைச் சந்திக்க, நாளை ஓ.பி.எஸ். சிவகங்கை செல்ல உள்ள நிலையில், அவரின் வருகையைக் கண்டித்து சிவகங்கை நகர் அ.தி.மு.க. நிர்வாகிகள், சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம் உள்ளிட்ட பகுதிகள் முழுவதும் பன்னீர்செல்வத்தைக் கண்டித்து போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
அந்த போஸ்டர்களில், ‘கழகத்தைக் கயவர்களுக்குக் காட்டிக் கொடுத்த பன்னீர்செல்வமே வராதே’ என்றும், ‘துரோகத்திற்கு விலை போன அமாவாசை பன்னீர்செல்வமே உன்னை அம்மாவின் ஆன்மா மன்னிக்காது’ என்று வாசகங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டர் ஓ.பி.எஸ். ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.