ஜெயக்குமார் தனசிங், நெல்லை கிழக்கு காங். தலைவர்
ஜெயக்குமார் தனசிங், நெல்லை கிழக்கு காங். தலைவர்

“யாரையும் பழிவாங்க வேண்டாம்!” – மறைந்த காங். தலைவர் எழுதிய 2 கடிதங்கள் சிக்கின!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எழுதிய மேலும் இரண்டு கடிதங்கள் கிடைத்துள்ளன.

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மரணம் தமிழக அரசியலில் புயலை கிளப்பி உள்ளது.

ஜெயக்குமாரின் உடல் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், இவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி இன்று அவரது உடல் சொந்த ஊரில் உள்ள தேவாலயத்தில், இறுதி பிரார்த்தனைக்குப் பின் அடக்கம் செய்யப்படுகிறது.

ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அதற்காக 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில், மறைந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் எழுதியதாக மேலும் இரண்டு கடிதங்கள் வெளியாகி உள்ளது. அதில் தனக்கு 14 நபர்கள் லட்சக்கணக்கான பணம் பாக்கி வைத்துள்ளதாகவும், அதற்காக பழி வாங்க வேண்டாம் என்றும் ஏப்ரல் 27ஆம் தேதி தன் மருமகன் ஜெயபாலுக்கு எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இதுதொடர்பான அந்த கடிதத்தில், மகள் கத்ரீன் திருமணத்தை சிறப்பாக நடத்திய அனைவருக்கும் நன்றி. குடும்பத்தினர் மீது தனது அன்பு எப்போதும் உண்டு. சட்டம் தன் கடமையை செய்யும், தனது பிரச்சினையை மனதில் வைத்து கடிதத்தில் குறிப்பிட்டுள்ள நபர்களை யாரும் பழிவாங்க வேண்டாம் என்றும் அதில் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் யார் யாரிடம் இருந்து எவ்வளவு பணம் வசூலிக்க வேண்டும் என்றும், தனக்கு வர வேண்டிய லட்சக்கணக்கான பணம் தொடர்பாக 14 பேர் கொண்ட பட்டியலையும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தான் திருப்பி அளிக்க வேண்டிய பண விவரங்களையும் ஜெயக்குமார் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியனிடம் ரூ. 5 லட்சம் கொடுத்துவிட்டு காசோலையை திரும்ப பெற வேண்டும் என்றும் இடிந்தகரையை சேர்ந்தவருக்கு ரூ.10 லட்சம் திரும்ப கொடுக்க வேண்டும் என்பதையும் அதில் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சொத்து ஆவணங்கள் குறித்தும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com