பேனா, சமாதி கட்ட நிதி இருக்கு, ஆசிரியர்களுக்கு தரமுடியாதா? – சீமான் கேள்வி

ஆசிரியர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சீமான் செய்தியாளர் சந்திப்பு
ஆசிரியர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சீமான் செய்தியாளர் சந்திப்பு
Published on

கலைஞருக்கு பேனா சின்னம் கட்ட நிதி இருக்கும் போது ஆசிரியர்களுக்கு சம்பளத்தை உயர்த்திக் கொடுப்பதற்கு நிதி இல்லையா என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் பள்ளிக்கல்வித் துறை வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவந்த பகுதிநேர ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களை இன்று காலை போலீசார் கைது செய்தனர். அவர்களை மயிலாப்பூர் சமூகநலக் கூடத்தில் போலீசார் தங்கவைத்தனர். அவர்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது:

”அவர்கள் கேட்கும் ஊதியத்தில் பாதி அளவாவது கொடுங்கள். எல்லாவற்றுக்கும் நிதி இல்லை என்கிறார்கள். சமாதி கட்ட, பேனா கட்ட, கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை கட்ட, நூலகம் கட்ட நிதி எப்படி வருகிறது? உண்மையில் மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள், தேர்தலில் ஓட்டுக்குப் பணம் கொடுக்க பணம் கொடுப்பீர்களா, இல்லையா? எத்தனை ஆயிரம் கோடி கொட்டுவீர்கள்?

நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது நிதி நெருக்கடி இருக்கிறது என்று தெரியுமா? தெரியாதா? நிதி நெருக்கடி இருக்கிறது என்று தெரிந்தே எதற்காக வாக்குறுதி கொடுத்தீர்கள்?

ஆசிரியர்களைப் போல, தமிழகம் முழுவதும் உள்ள மதுபானக் கடை ஊழியர்கள் இப்படி போராட்டம் நடத்தினால் இந்த அரசு கண்டுகொள்ளாமல் இருக்குமா? உங்கள் கோரிக்கை என்ன என அரை மணி நேரத்தில் போய் பேசுவார்கள். குடிக்க வைக்கிற மதுபானக் கடை ஊழியருக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, கல்வி கற்றுத்தரும் ஆசிரியர்களுக்குக் கொடுக்க மறுப்பது ஏன்?” என்று சீமான் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com