சென்னையில் டபுள்டெக்கர் நான்குவழிச் சாலை! அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு வருமா?

துறைமுகம்- மதுரவாயல் வரையிலான இரண்டடுக்கு சாலை
Double Decker Road Project
இரண்டடுக்கு சாலைத் திட்டம்
Published on

சென்னையில் அமையவிருக்கும் 20.5 கிமீ தொலைவிலான இரண்டடுக்கு வழித்தடம் நகரையே மாற்றி அமைக்க உள்ளது. ரூ. 5,885 கோடியில் அமையவுள்ள இதன் கட்டுமானம் பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகும்.

சென்னைத் துறைமுகம் – மதுரவாயல் இடையே இந்த இரண்டடுக்கு வழித்தடத்தின் கட்டுமானப் பணிகள் கூவம் ஆற்றின் கரையில் கோயம்பேடு வழியாக நடைபெற்று வருகின்றன. வரும் நவம்பர் 2027-க்குள் இந்த வழித்தடத்தின் பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரண்டடுக்கு வழித்தடம் சென்னையின் உள்ளூர் போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் எனவும் துறைமுகத்திற்கான சரக்கு போக்குவரத்தை மேம்படுத்தும் எனவும் கருதப்படுகிறது.

சென்னை துறைமுகம், மதுரவாயல் இடையே இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் உருவாக்கப்படும் இந்த நான்கு வழித்தடம் இரண்டு நிலைகளாக வடிவமைக்கப்படுகிறது.

1) கீழ் அடுக்கு: பல்வேறு நுழைவு, வெளியேறும் பாதைகளுடன் உள்ளூர் நகரப் போக்குவரத்திற்காக கீழ் அடுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

2) மேல் அடுக்கு: சென்னை துறைமுகத்திற்குச் செல்லும் கனரக வாகனங்களுக்காக இந்த மேல் அடுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த வழித்தடம் பெங்களூரு, வேலூர், கிருஷ்ணகிரியில் இருந்து வரும் வாகனங்களை, மேற்கு சென்னையுடன் இணைத்து, போக்குவரத்தை மேம்படுத்தும்.

இந்த சாலையால் பயனடையும் சென்னையின் 5 பகுதிகள்:

1) மதுரவாயல்: மேற்குப் பகுதியின் எல்லையில் அமைந்துள்ள இந்த வழித்தடம், தேசிய நெடுஞ்சாலை எண்: 48, பூந்தமல்லி, பெங்களூரு ஆகியவற்றை அணுக உதவும்.

2) வானகரம்: இது பூந்தமல்லி,-மேற்கு சென்னை இடையேயான போக்குவரத்தை மேம்படுத்துகிறது.

3) போரூர்: மேற்கு, மத்திய சென்னையை இந்த வழித்தடம் இணைக்கிறது.

4) கோயம்பேடு: சென்னையின் முக்கிய வர்த்தக போக்குவரத்து மையமாக இருக்கும் இந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கிறது.

5) அமைந்தகரை – அரும்பாக்கம்: இந்த இரண்டடுக்கு வழித்தடத்தின் மேற்குப் பகுதியில் இருக்கும் இந்த இடங்களின் வழியாக கோயம்பேடு, மத்திய சென்னைக்கான போக்குவரத்தை மேம்படுத்துகிறது.

மேலும், இந்த வழித்தடத்தடம் சிந்தாதிரிப்பேட்டை, மான்டியத் சாலை, பின்னி சாலை, ஸ்பர் டேங்க் சாலை, காமராஜ் சாலை, சிவானந்த சாலை, கல்லூரி சாலை போன்ற சென்னையின் முக்கிய இடங்களை இணைத்து, மத்திய சென்னை, சென்னை துறைமுகத்திற்கான போக்குவரத்தை மேம்படுத்தும்.

மதுரவாயல், வானகரம், போரூர், கோயம்பேடு ஆகிய பகுதிகளில் ஏற்கனவே நிலங்களின் விலை உயர்ந்துள்ள நிலையில், வரும் காலங்களில் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2008-இல் திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டு, 2009-இல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கால் அடிக்கல் நாட்டப்பட்ட திட்டம் இது. பின் வந்த அதிமுக ஆட்சியில் இத்திட்டத்துக்கு ஆதரவு அளிக்கப்படாததால் தாமதம் ஆனது. பிறகு நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர் பல ஆண்டு தாமதத்துக்குப் பின்னால் பணிகள் உயர்ந்த செலவின மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com