“டபுள் இன்ஜின் மாடல் இங்கு எடுபடாது...பெண்கள் பாடம் கற்பிப்பார்கள்..!” - கனிமொழி

கனிமொழி எம்.பி.
கனிமொழி எம்.பி.
Published on

“டபுள் இன்ஜின் மாடல் இங்கு எடுபடாது.” என தேசிய ஜனநாயக கூட்டணியை கனிமொழி எம்.பி. விமர்சித்து பேசியுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டிக்கு அருகில் உள்ள திருமலை சமுத்திரம் பகுதியில் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” திமுக டெல்டா மகளிர் அணி மாநாடு இன்று (ஜன. 26) நடைபெற்றது. இந்த விழாவில் திமுக துணை பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற திமுக குழு தலைவருமான கனிமொழி பேசுகையில், “நமக்கு ஏதாவது வாய்ப்பு கிடைக்குமா என்று பலர் பல கனவுகளோடு பல்வேறு திசைகளில் இருந்து பலர் தமிழ்நாட்டை நோக்கிப் படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். உள்ளூரிலிருந்தும் சிலர் படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இங்கே கூடியிருக்கும் இந்தக் கூட்டம் அவர்களுக்கு ஒரு பாடம் சொல்லித் தந்திருக்கும். இது தளபதியின் படை. நம்முடைய முதலமைச்சரின் படை. நம்முடைய கழகத் தலைவர் அண்ணன் ஸ்டாலின் அவர்களின் படை. இது எந்தப் பக்கமும் திரும்பாது. இங்கே மட்டும்தான் வரும், கூடும், ஓட்டு போடும். ஏனென்றால் தமிழ்நாட்டு மக்கள் தெளிவானவர்கள். எங்கு கைதட்ட வேண்டும், எங்கு பார்க்க வேண்டும், எங்கு விலகி இருக்க வேண்டும், எந்தப் பக்கமே போகாமல் இருக்க வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும். அதைவிடப் புத்திசாலிகள் தமிழ்நாட்டில் இருக்கும் பெண்கள். வாய்ச்சவடால் விட்டு ஆட்சி நடத்த முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும்.

நம்முடைய முதலமைச்சரால் மட்டும்தான் பெண்களுக்கான ஆட்சி, பெண்களை முன்னேற்றக் கூடிய ஆட்சி, பெண்களின் எதிர்காலத்தைப் பற்றி அக்கறை கொண்ட ஆட்சியை நடத்த முடியும் என்று அவர்களுக்குத் தெரியும். யாரையும் நம்பி ஏமாந்து போகக் கூடியவர்கள் இல்லை தமிழ்ப் பெண்கள்.

நமது வீட்டுப் பிள்ளைகள் படிக்க வேண்டும், பெண்கள் படிக்க வேண்டும் என்பதற்காகப் புதுமைப்பெண் திட்டத்தைக் கொண்டு வந்து நடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சர் நமது முதலமைச்சர் மட்டும்தான். இதையெல்லாம் தெளிவாக நம்முடைய பெண்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதனால் எந்தப் பக்கமும் திரும்பிக் கூடப் பார்க்க அவர்கள் தயாராக இல்லை.

அது மட்டுமல்ல, வரும்போதெல்லாம் “டபுள் எஞ்சின், டபுள் எஞ்சின்” என்று சொல்கிறார்கள். அதுதான் இந்த நாட்டிற்கு நல்ல எஞ்சின் என்று சொல்கிறார்கள். எனக்குத் தெரிந்த வரை அந்த எஞ்சின் என்றைக்குமே வேலை செய்யாத எஞ்சினாகத்தான் இருக்கிறது – ரிப்பேர் மாடல் எஞ்சின், தேய்ந்த எஞ்சின். ஏனென்றால் நம்முடைய திராவிட மாடல் எஞ்சினை எடுத்துக் கொள்ளுங்கள். குஜராத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள் என்றால் மொத்தம் ஆறுதான். ஆனால் தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் இரண்டாயிரத்திற்கு மேல் உள்ளன. அதற்கான படுக்கை வசதிகள் கிட்டத்தட்ட ஒரு லட்சத்தைத் தொட்டுக் கொண்டிருக்கின்றன. உத்தரப் பிரதேசத்தில் கோவிட் நேரத்தில் மக்களை மருத்துவமனைக்குள் அனுமதிக்கக்கூட முடியவில்லை. வெளியில் ஆட்டோவிலும் டிராக்டரிலும் படுத்துக் கிடந்தார்கள். ஒரு லட்சம் படுக்கை வசதிகளை மக்களின் ஆரோக்கியத்திற்காக, நலனுக்காகச் சாதித்துக் காட்டிய ஆட்சி – திராவிட எஞ்சின் ஆட்சி.

அதேபோல் தமிழ்நாட்டில்தான் தொழில் வளர்ச்சி அதிகம். கிட்டத்தட்ட 38 ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ள மாநிலம் தமிழ்நாடு. அதில் 42 சதவீதம் பெண்கள் வேலை செய்கிறார்கள். தமிழ்நாடுதான் மின்னணு ஏற்றுமதியில் முதலிடம், ஜவுளி ஏற்றுமதியில் முதலிடம். வேறு எந்த டபுள் எஞ்சினும் இந்தச் சாதனைகளைச் செய்யவில்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என்று தமிழ்நாட்டைப் பார்த்துச் சொல்கிறார்கள். ஆனால் நீங்கள் ஆட்சி செய்து கொண்டிருக்கும் டபுள் எஞ்சின் மாநிலங்களில்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம். அதைத் தாண்டி, சமூக மேம்பாட்டுக் குறியீட்டில் (Social Progress Index) – ஒரு மாநிலத்தில் தண்ணீர், காற்று, வீடு, கல்வி, மக்களின் பாதுகாப்பு, கருத்து வெளியிடும் உரிமை போன்ற அடிப்படைத் தேவைகளை எடுத்துக்கொண்டு கணிக்கும் குறியீட்டில் – மிகப் பெரிய மாநிலங்களில் முதலிடத்தில் தமிழ்நாடு இருக்கிறது.

உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற டபுள் எஞ்சின் ஆட்சி நடக்கும் இடங்கள் 30, 31, 32, 33 என்று இறங்கிக் கொண்டே போகின்றன. இதுதான் டபுள் எஞ்சின் செய்த சாதனை. இங்கு வந்து உரையாற்றி எல்லாரையும் கேள்வி கேட்டுவிட்டு நம்முடைய பிரதமர் சென்று கொண்டிருக்கிறார். அவர் குஜராத்தின் முதலமைச்சராக மோடி இருந்தபோது 2012இல் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 56 ரூபாய். ஏன் ரூபாய் மதிப்பு இறங்கிக் கொண்டே போகிறது? நல்ல ஆட்சி நடக்கவில்லை, நல்லவர்கள் கையில் ஆட்சி இல்லை, திறமையானவர்களிடம் ஆட்சி இல்லை என்று சொன்னார். இன்று டெல்லியில் ஒன்றிய அரசாங்கம் அவர்களால் நடத்தப்படுகிறது. இன்று ஒரு டாலருக்கு ரூபாய் 92ஆக இறங்கியிருக்கிறது அல்லவா? உங்கள் ஆட்சியில் இன்னும் மோசமாக இறங்கியிருக்கிறது அல்லவா? தனியாக ஆட்சி நடத்தும் இடத்திலும் ஒன்றும் செய்யவில்லை.

இப்படிப்பட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் நீங்கள் எங்களைப் பார்த்து கேள்வி கேட்கிறீர்கள், “இந்த ஆட்சியை மாற்றிக் காட்டுவேன்” என்று சபதம் எடுக்கிறீர்கள். நான் ஒன்று சொல்கிறேன் – நீங்கள் எந்தக் கனவோடு இங்கு வந்து இறங்கினாலும், நிச்சயமாகத் தமிழ்ப் பெண்கள் உங்களுக்கு சரியான பாடத்தைச் சொல்லித் தருவார்கள்.

இன்று குடியரசு தினம். குடியரசு என்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி. ஆனால் இங்கு தமிழ்நாட்டில் ஒருவர் இருக்கிறார் – அவருக்கு குடியரசு என்றால் என்ன என்று தெரியாது. ஏன் முதலமைச்சர் ஆளுநரை அழைத்துப் பேச வைக்கிறார் என்பதை எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால் வேறு வழியில்லை. ஒவ்வொரு ஆண்டும் வருகிறார். சட்டமன்றத்தில் வந்து, கொடுக்கப்பட வேண்டிய தமிழ்நாட்டின் பாலிசி நோட்டைப் படிக்க மாட்டார். தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் சொல்வதைச் செய்ய முடியாது என்று, இந்த நாட்டு மக்களை, அரசைத் தேர்ந்தெடுத்த மக்களை ஒவ்வொரு ஆண்டும் அவமதித்துச் செல்கிறார். அதனால்தான் நம்முடைய முதலமைச்சர் “ஆளுநர்கள் படிக்கவே வேண்டாம்” என்று தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார்.

இன்னொரு தீர்மானத்தையும் நாம் நீண்ட நாட்களாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம் – இந்தக் கவர்னரே வேண்டாம். இவர்களால் எந்தப் பயனும் இல்லை. திராவிட முன்னேற்றக் கழகம் மிக நீண்ட காலமாக இதைத் தொடர்ந்து சொல்லி வருகிறது. இந்த நாடு முழுவதும் உள்ள கவர்னர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 700 கோடி செலவழிக்கப்படுகிறது. இந்த 700 கோடியை எத்தனையோ பிள்ளைகளின் படிப்பிற்கு, அவர்களின் வாழ்க்கையை முன்னேற்றுவதற்கு செலவழிக்கலாம். ஆனால் பாஜக இல்லாத ஆட்சிகளை கஷ்டப்படுத்தவும், மாநில மக்களை அசிங்கப்படுத்தவும், அவமானப்படுத்தவும் ஒன்றிய அரசு கவர்னர்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

பிரதமர் மோடி இனி அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வருவார். ஒன்றிய அரசு நம்முடைய குழந்தைகளுக்கு தர வேண்டிய நீதி 2500 கோடிக்கு மேல் உள்ளது – அதை எப்போது கொடுப்பீர்கள் என்று சொல்லிவிட்டு வாருங்கள். அதேபோல், ஓசூர் விமான நிலையத்தை எப்போது தருவீர்கள் என்று சொல்லிவிட்டு வாருங்கள். வெள்ள நிவாரணத்திற்காக முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார் – அதை எப்போது தருவீர்கள் என்று சொல்லிவிட்டு வாருங்கள். டி-லிமிடேஷன் வந்தால் தமிழ்நாட்டில் பாதிப்பு இருக்குமா, இல்லையா? எம்பிக்களின் எண்ணிக்கை குறையுமா, அப்படியே இருக்குமா என்று ஒரு பதிலைச் சொல்லுங்கள். இது வரை பதில் இல்லை. வரும்போது அதற்கான பதிலோடு வாருங்கள், பிரதமர் அவர்களே. தமிழ் மீது திடீரென்று அக்கறை வந்தது போல் பேசுகிறீர்களே – இதுவரை சமஸ்கிருதத்திற்கு 2500 கோடி செலவழித்தீர்கள், தமிழுக்கு 167 கோடி செலவு செய்தீர்கள். அந்த இரண்டையும் ஒன்றாக்கிவிட்டு வாருங்கள். தொடர்ந்து தமிழ்நாட்டின் திட்டங்களுக்கு தர வேண்டிய நிதியை நிறுத்திவிட்டு, சீசனுக்கு சீசன் வந்து தேர்தல் பிரச்சாரம் மட்டும் செய்து, தமிழ்நாட்டு மக்களை வஞ்சித்துக் கொண்டிருப்பவர்களோடு கூட்டணி வைத்திருப்பவர்கள் யார் என்பதை தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு இந்தத் தமிழ் மண்ணில் இடமில்லை என்பதை நாம் காட்டுவோம்” என்று பேசினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com