இராமதாஸ்
இராமதாஸ்

சென்னை சளி-காய்ச்சல் : டாக்டர் இராமதாஸ் அறிவுரை

Published on

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கு காய்ச்சல், சளி உபாதைகள் பரவிவருவதால், அதற்கு முறையாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என பா.ம.க. நிறுவனர், தலைவர் மருத்துவர் ச.இராமதாசு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

”சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சில நாட்களுக்கு முன்பு பல காகங்கள் திடீரென உயிரிழந்தது, காகங்களின் மாதிரிகளை மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள கால்நடை ஆராய்ச்சி நிறுவன பரிசோதனை மையத்தில் சோதனை செய்ததில் பறவை காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டில் பறவை காய்ச்சல் மனிதர்களிடத்தில் உறுதி செய்யப்படவில்லையென்றாலும் மக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களை பொது சுகாதார துறை வெளியிட்டுள்ளது. மேலும், "திடீரென இறந்த கோழிகளின் இறைச்சியை சாப்பிட வேண்டாம். 'கோழி இறைச்சியை முழுமையாக சமைத்து சாப்பிட வேண்டும், அந்த இறைச்சியை ஆஃப்-பாயிலாக (அரைவேக்காடு) சாப்பிடக் கூடாது' என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இந்நிலையில் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் கடந்த சில நாட்களில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட காகங்கள் மருத்துவமனையின் ஒருங்கிணைந்த மாவட்ட குழந்தைகள் பிரிவு மற்றும் காசநோய் பிரிவு அருகே ஆங்காங்கே இறந்து கிடந்தது. மேலும் 10-க்கும் மேற்பட்ட காகங்கள் ஆங்காங்கே பறக்க இயலாமல் நின்ற இடத்திலேயே சுற்றுச்சுற்றி மயங்கிய நிலையில் இருந்துள்ளது. இறந்த காகங்களை மருத்துவமனை ஊழியர்கள் பாதுகாப்பு கவச உடையுடன் அப்புறப்படுத்தி குழி தோண்டி புதைத்துள்ளனர்.” என்று அறிக்கை ஒன்றில் இராமதாசு கூறியுள்ளார்.

”இதற்கிடையே காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் செவிலியர் கல்லூரியில் பயிலும் மாணவிகள், காஞ்சிபுரம் அரசு மருத்துவனையில் பயிற்சி எடுத்துக்கொண்ட நாளில் காய்ச்சல் மற்றும் சளி பாதிப்புகள் ஏற்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவர்கள் அனைவரும் கல்லூரியிலேயே தங்கியிருந்து சிகிச்சைபெற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இரத்த மாதிரி எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் பலருக்கு காய்ச்சல், சளி பாதிப்புகள் உள்ளதாகவும், இது பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் சிறு உடல் உபாதை என்று சுகாதாரத் துறையினர் கூறுகின்றனர்.

எனவே பொதுமக்கள் அனைவரும் விழிப்புடனும், சிறு உடல்நலக்குறைவு ஏற்பட்டாலும் உடனடியாக முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும்.” என்று இராமதாசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com