751 டாக்டர்களின் கோபம் - இராமதாஸ் சாபம்!

இராமதாஸ்
இராமதாஸ்
Published on

தேர்வு செய்யப்பட்டு பணி வழங்காத 751 மருத்துவர்களின் கோபம் திமுகவை சும்மாவிடாது என்று பா.ம.க. நிறுவனர் இராமதாசு சாபம்விடாதகுறையாக அறிக்கை விட்டுள்ளார். 

அந்த அறிக்கை விவரம்: 

”தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு 1,100 உதவி மருத்துவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு நவம்பர் 21-ம் தேதி வெளியிட்டது.

அதன்படி விண்ணப்பித்தவர்களுக்கு போட்டித் தேர்வு நடத்தப்பட்டு, தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு 1,071 பேர் அரசு உதவி மருத்துவர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். கடந்த 13-ம் தேதி 1,071 பேருக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டதில் 320 பேருக்கு மட்டும் அதாவது 29.87 சதவீதத்தினருக்கு மட்டும் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

மற்ற 751 பேருக்கு வருங்காலத்தில் மருத்துவர் பணியிடங்கள் காலியானால், அப்போது கலந்தாய்வு நடத்தி நியமன ஆணைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டவர்களில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டுள்ளதா என மக்கள் நல்வாழ்வுத்துறை தெளிவுபடுத்த வேண்டும். தேசிய நலவாழ்வுக் குழுமத்தின் கீழ் மருத்துவர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க திமுக அரசு திட்டமிட்டு, அத்தியாவசிய பணி என தேர்தல் ஆணையத்தில் சிறப்பு அனுமதி பெற்று, அரசாணை பிறப்பித்து இத்திட்டத்தின் கீழ் பணியமர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

கொரோனா காலகட்டத்தின்போது காத்திருப்புப் பட்டியலில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் தற்காலிகமாக தேசிய நலவாழ்வு குழுமம், மாவட்ட நலச் சங்கங்கள் ஆகியவை மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டதை மேற்கோள்காட்டப்பட உள்ளதாகவும் தெரியவருகிறது.

இப்பணியில் சேருவது நிரந்தரப் பணியாகக் கருதப்பட வாய்ப்பில்லை. மேலும் இப்பணிக்கு மத்திய, மாநில அரசுகளின் நிதிப் பகிர்வு தேவைப்படுவதால், கூடுதல் பணியிடங்களை உருவாக்க நிதியமைச்சகத்தின் அனுமதியைப் பெற முயற்சித்து, அமைச்சகம் அனுமதிக்க மறுத்தால் இதை வைத்து மலிவான அரசியல் செய்யவும் தி.மு.க. திட்டமிடக்கூடும்.

ஒரே தகுதியுடைய மருத்துவர்களில் சுமார் 70 சதவீதம் பேருக்கு துரோகம் செய்வது ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்ய உள்ள மருத்துவர்களின் கோபம் சும்மாவிடாது. எதில் வேண்டுமானாலும் அரசியல் செய்யலாம் என்ற நிலைக்கு தி.மு.க. வந்திருப்பது அதன் தோல்வி பயத்தையே வெளிப்படுத்துகிறது.” என்று இராமதாசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com