டிஜிபி நியமனம்- இராமதாஸ் கோரிக்கை

டிஜிபி அலுவலகம்
டிஜிபி அலுவலகம்
Published on

தமிழ்நாட்டின் நிரந்தர காவல்துறை தலைமை இயக்குநர் நியமனத்தை சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு உடனடியாகச் செய்ய வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக நிரந்தர காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) நியமிக்கப்படாமல், தற்காலிக பொறுப்பில் காவல்துறை நிர்வாகம் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது மத்திய பணியாளர் தேர்வாணையம் (UPSC) தமிழ்நாட்டின் புதிய டிஜிபி நியமனத்திற்கான மூவர் பெயர்ப்பட்டியலை இறுதி செய்துள்ளது வரவேற்கத்தக்க முன்னேற்றமாகும்.” எனப் பாராட்டியும் உள்ளார்.

”அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள சந்தீப் ராய் ரத்தோர், ராஜீவ் குமார் மற்றும் மகேஸ் குமார் அகர்வால் ஆகிய மூவரும் அனுபவமிக்க உயர் அலுவலர்கள் ஆவர். உச்சநீதிமன்றத்தின் காவல்துறை சீர்திருத்த வழிகாட்டுதல்கள் மற்றும் காவல்துறை தலைமை நியமனத்திற்கு தொடர்புடைய சட்ட நடைமுறைகளின் படி, UPSC பரிந்துரைத்த பட்டியலிலிருந்து மாநில அரசு உடனடியாக ஒரு தகுதியான அதிகாரியை தேர்வு செய்து தமிழ்நாட்டின் நிரந்தர டிஜிபியாக நியமிக்க வேண்டும்.

தற்போது தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு தொடர்பான பல்வேறு சவால்கள் நிலவி வரும் சூழலில், முழுநேர நிரந்தர காவல்துறை தலைமை இயக்குநர் நியமனம் மிகவும் அவசியமானதாக உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்கள், சமூக அமைதி, பொதுமக்களின் பாதுகாப்பு உணர்வு மற்றும் சட்டம்-ஒழுங்கை வலுப்படுத்துவது போன்ற முக்கிய பொறுப்புகளை திறம்பட முன்னெடுக்க வலுவான காவல்துறை தலைமையே தேவைப்படுகிறது.

எனவே, தற்போது பதவியேற்றுள்ள தமிழக அரசு, UPSC பரிந்துரைத்துள்ள மூவர் பட்டியலிலிருந்து தமிழ்நாட்டிற்கு சிறந்த மற்றும் திறமையான அதிகாரியை தேர்வு செய்து ஓரிரு நாட்களுக்குள் நிரந்தர டிஜிபியாக நியமனம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

மேலும், காவல்துறை நிர்வாகம் அரசியல் சார்பற்ற, திறன் மிக்க மற்றும் சட்டப்பூர்வமான முறையில் செயல்படுவதற்காக இந்த நியமனத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளும், குறிப்பாக எதிர்க்கட்சிகளும், ஜனநாயக பொறுப்புணர்வுடன் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

தமிழக மக்களின் பாதுகாப்பு, சட்டத்தின் ஆட்சி மற்றும் காவல்துறையின் நிர்வாக நிலைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், இந்த டிஜிபி நியமனத்தை தமிழக அரசு தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும்.” என்றும் இராமதாசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com