பா.ம.க. நிறுவனர் இராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் இராமதாஸ்

நீட் பயிற்சியை இன்னும் தொடங்கவில்லை - இராமதாஸ் குற்றச்சாட்டு!

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு11ஆம் வகுப்பு முதல் நீட் பயிற்சியைத் தொடங்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் இராமதாசு கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
” மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வை எழுத விரும்பும் தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சியை தொடங்குவது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இது ஏமாற்றம் அளிக்கிறது. கடந்த ஆண்டுகளில் மிகவும் தாமதமாக தொடங்கப்பட்ட நீட் பயிற்சியால் எந்தப் பயனும் விளையாத நிலையில், நடப்பாண்டிலாவது முன்கூட்டியே பயிற்சியைத் தொடங்குவதுதான் சரியான செயலாக இருக்கும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மாணவர்கள், குறிப்பாக தனியார் நிறுவனங்களில் நீட் பயிற்சி பெறுவதற்கு வாய்ப்பும் வசதியும் இல்லாத அரசு பள்ளிகளின் மாணவர்கள் வெற்றி பெறுவதை உறுதிசெய்ய வேண்டும்; இது கடந்த காலங்களில்  இருந்ததை விட, இப்போது சவாலானதாக மாறியிருக்கிறது என்பதுதான் ஆய்வுகள் சொல்லும் உண்மை என்று கூறியுள்ள இராமதாசு,

”நடப்பாண்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 % ஒதுக்கீட்டில் சேர்ந்தவர்களைத் தவிர, பொதுப்பிரிவில் அரசுப் பள்ளி மாணவர் ஒருவர்கூட சேரவில்லை. 7.5 % ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்தவர்களில்கூட 20% பேர் மட்டுமே முதல் முயற்சியில் நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள். மற்றவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் தனியார் பயிற்சி மையங்களில் சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள்.”என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.


”கிராமப்புற, ஏழை மாணவர்கள் பயன்பெறவே 7.5 % இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. அதன்படி மருத்துவப் படிப்பில் சேர்வதற்குகூட தனியார் மையங்களில் நீட் பயிற்சி பெற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. ஒரே தீர்வு, தனியார் பயிற்சி மையங்களில் அளிப்பதை விட தரமான  பயிற்சியை தமிழக அரசு பள்ளிகளில் வழங்குவதுதான். ஆனால், இந்தத் தீர்வைச் செயல்படுத்தவேண்டியதன் தேவையை பள்ளிக் கல்வித் துறை உணர்ந்ததாகத் தெரியவில்லை.” என்றும் இராமதாசு குறைகூறியுள்ளார்.

”நீட் தேர்வில் வெற்றி பெற பலரும் 6 ஆண்டுகள் வரை பயிற்சி பெற வேண்டியிருக்கும் நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 14 நாள்கள் மட்டும் பயிற்சி கொடுக்கப்படுகிறது. இது எந்த வகையில் போதுமானதாக இருக்காது. இதனால்தான் 7.5 % ஒதுக்கீட்டிலும் 80% இடங்களை தனியார் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு தாரை வார்க்க வேண்டியிருக்கிறது.

நீட் விலக்கு பெறும் வரை, அரசு பள்ளி மாணவர்களுக்கு நீண்ட காலம் பயிற்சி அளிக்க வேண்டியதன்  தேவையை தமிழக அரசு இப்போதாவது உணர்ந்து கொள்ள வேண்டும். 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நவம்பர் மாதத்தில் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை வாரத்தில் ஒரு நாள் பெயரளவில் பயிற்சி அளிக்கும் முறையைக் கைவிட்டு, அனைத்து மாணவர்களுக்கும் குறைந்தது இரண்டு ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படுவதை பள்ளிக்கல்வித் துறை உறுதி செய்ய வேண்டும். அதற்காக 11ஆம் வகுப்பு தொடங்கிய வாரம் முதல், 12ஆம் வகுப்பு தேர்வு முடிந்து நீட் தொடங்குவதற்கு முந்தைய வாரம் வரை இரு ஆண்டுகளுக்கு முழுமையான பயிற்சியை திறமையான ஆசிரியர்கள், வல்லுநர்களைக் கொண்டு அரசு வழங்க வேண்டும்.

கடந்த ஆண்டில் வட்டத்திற்கு ஒரு மையத்தில் மட்டுமே நீட் பயிற்சி வழங்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் வட்டத்திற்கு இரு மையங்களில் பயிற்சி வழங்கப்பட வேண்டும். பயிற்சியில் சேர விருப்பமுள்ள அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட வேண்டும். பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு கையேடு மற்றும் வினா - விடை தொகுப்பை இலவசமாக வழங்க வேண்டும். நடப்பாண்டிற்கான பயிற்சி வகுப்புகளை அடுத்த வாரத்திலேயே தொடங்குவதற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று இராமதாசு கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com