தமிழக மீனவர்கள் இந்தியக் குடிகள் இல்லையா?- துரை வைகோ காட்டம்!
தொடர்ச்சியாகதமிழக மீனவர்களை இலங்கை அரசு கைதுசெய்து வருவதுடன், கடந்த வாரம் இலங்கைக் கடலில் மீனவர் ஒருவர் உயிரிழக்கவும் நேர்ந்தது. இதுகுறித்து மக்களவையில் ம.தி.மு.க. உறுப்பினர் துரை வைகோ இன்று பேசினார்.
அப்போது, “ தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் வெளிவுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில், கடந்த 7 மாதங்களில் மட்டும் 250 -க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்கள் என குறிப்பிட்டுள்ளார். மேலும், 2024 ஆம் ஆண்டில் மட்டும் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகமான தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன என்பதையும் அக்கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
இதற்குமுன் முதலமைச்சர்களாக இருந்தவர்களும், தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடந்த 40 ஆண்டுகளாக ஒன்றிய அரசிடம் இந்தப் பிரச்சினைக்கு நிலையான மற்றும் நிரந்தரத் தீர்வை கொண்டுவர வேண்டுமென கோரிக்கை வைத்து வருகின்றார்கள். ஆனால், இப்பிரச்சனை முன்பை விட மோசமான நிலையை அடைந்திருப்பதால் ஒன்றிய அரசின் மீது தமிழக மீனவர்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர். ஆனால், மற்ற மாநிலங்களைச் சேர்ந்த, குறிப்பாக குஜராத் மாநில மீனவர்கள் கடலோர காவல்படை, கடற்படை என ஒன்றிய அரசின் அனைத்து ஆதரவையும் பெற்றுள்ளனர். அவர்கள் எந்தவிதமான பிரச்சினையில் சிக்கினாலும், உடனடியாக அவர்களை காப்பாற்றுவதற்கு இந்த அமைப்புகள் வருகின்றன.
கச்சத்தீவு 1974 ஆம் ஆண்டு இலங்கைக்கு ஒப்படைக்கப்பட்டது என்பது எனக்கு தெரியும்.
1974, 1976 ஆம் ஆண்டுகளில் இந்தியா-இலங்கை கச்சத்தீவு ஒப்பந்தங்கள் பரிபூரணமாக செயல்படுத்தப்படாமல், அவை நமது தமிழ் மீனவர்களின் உரிமைகளைப் பறித்துவிட்டன என்பதும் எனக்கு தெரியும்.
இப்பிரச்னையின் பின்புலத்தில் புவியியல் அரசியல் உள்ளது என்பதும் எனக்கு தெரியும்.
ஆனால், ஒன்றிய அரசு இந்த பிரச்சினையை தீர்க்க உண்மையான அக்கறையுடன் செயல்படுகிறதா என்பது பற்றி மட்டும் எனக்கு தெரியவில்லை.” என்று துரை விமர்சனம் வைத்தார்.
தமிழக மீனவர்களை இந்த நாட்டின் குடிமக்களாக ஒன்றிய அரசு கருதுகிறதா எனத் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
”தமிழ்நாட்டை இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பின் ஓர் அங்கமாக ஒன்றிய அரசு கருதுகிறதா என்பதும் சந்தேகமாக இருக்கிறது. ஏனெனில் ஒன்றிய அரசு எங்களுக்கு உரிமையான நிதியை மறுப்பதோடு எங்கள் மீனவர்களையும் பாதுகாக்கவில்லை. ஆகவே, எங்கள் தமிழக மீனவர்களின் இந்த முக்கியமான பிரச்சினைக்கு நிலையான நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பிரதமரையும், வெளியுறவுத்துறை அமைச்சரையும் கேட்டுக்கொள்கிறேன்.” என்றும் துரை வைகோ பேசினார்.