செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ரகுபதி, வில்சன்
செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ரகுபதி, வில்சன்

முன்பு ஐ.டி., இ.டி., சி.பி.ஐ... இப்போது என்.சி.பி.!- அமைச்சர் ரகுபதி விமர்சனம்

”முன்பு வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ போன்றவற்றை களமிறக்கிவிட்ட மத்திய அரசு தற்போது போதைப் பொருள் தடுப்பு பிரிவை களமிறக்கிவிட்டுள்ளதாக தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார்.

அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறியதாவது:

பாஜகவின் அரசியல் அகில இந்திய அளவிலும் தமிழ்நாட்டிலும் எடுபடாது. அதன் சர்வாதிகார பிடியிலிருந்து நாட்டை விடுவிக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வரும் திமுகவை தேர்தல் களத்தில் கலங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பாஜக செயல்பட்டுவருகிறது. அதற்கு அதிமுக துதிபாடுகிறது.

முன்பு வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ போன்றவற்றை களமிறக்கிவிட்ட மத்திய அரசு தற்போது போதைப் பொருள் தடுப்பு பிரிவை களமிறக்கிவிட்டுள்ளது.

திமுக அரசு போதைப் பொருள் தடுப்பில் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக நீதிமன்றமும் மற்றவர்களும் பாராட்டியுள்ளனர். மத்திய அரசு, போதைப் பொருள் தடுப்பு பிரிவை வைத்து மிரட்டப் பார்க்கிறது.

குழு விசாரணை முழுமை அடைவதற்கு முன்னரே என்.சி.பி. துணை இயக்குநர் பத்திரிகையாளர் சந்திக்கிறார். திமுகவை கொச்சைப்படுத்த வேண்டும் என்பதற்காகவே நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பு அது.

அதிமுக ஆட்சியில் அமைச்சர்களே குட்கா வியாபாரிகளுக்கு துணையாக இருந்தனர் . முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ஒரு பேப்பர் கண்டெடுக்கப்பட்டது. அதில் 85 கோடி ரூபாய் எந்தெந்த அமைச்சர்களுக்கு கொடுக்கப்பட்டது என்ற விவரங்கள் இருந்தன. அது தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பாஜகவை தாங்கிப்பிடிக்கலாம் என்று மத்திய புலன் விசாரணை அமைப்புகள் துடித்துக் கொண்டிருக்கின்றன. ஜாபர் சாதிக் தேடப்படும் குற்றவாளி என்று அறிவித்தீர்கள். அவர் பிப்ரவரி 21ஆம் தேதி மங்கை படத்தின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது எங்கே போனீர்கள்.

2013ஆம் ஆண்டு ஜாபர் சாதிக் மீது ஒரு வழக்கு இருந்தது. அன்று ஆட்சியிலிருந்த அதிமுக ஒழுங்காக அந்த வழக்கை நடத்தவில்லை. அன்று ஜாபர் சாதிக்குக்காக வழக்கை நடத்தியவர் பால் கனகராஜ் என்ற பாஜகவின் வழக்கறிஞர் அணித் தலைவர்தான். ஜாபர் சாதிக்கை அன்று காப்பாற்றியது அதிமுகதான்.

எங்கள் இயக்கத்தில் 2 கோடி உறுப்பினர்கள் உள்ளார்கள். அவர்களை சோதித்துப் பார்த்து சேர்க்க முடியாது. உறுப்பினர்கள் தவறு செய்தால் உடனடியாக நீக்கப்படுகின்றனர். அப்படித்தான் ஜாபர் சாதிக் நீக்கப்பட்டார்.

போதைப் பொருள் நடமாட்டத்துக்கு முக்கியமான இடமாக இருப்பது குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகம்தான். போதைப் பொருள் தொடர்பான வழக்குகள் உத்தரப் பிரதேசத்திலும், குஜராத்திலும், மகாராஷ்டிராவிலும்தான் அதிகம் போடப்பட்டுள்ளது.

தேர்தல் வரும் இந்த சமயத்தில் திமுக மீது பொய்யான குற்றச்சட்டை சுமத்தப் பகல் கனவு காண்கிறது மத்திய அரசு. திமுக எப்போதும் சட்டவிரோத செயலில் ஈடுபடாது.

ஜாபர் சாதிக் பிடிக்கப்பட்டது தமிழ்நாட்டில் இல்லை. தமிழ்நாட்டில் போதைப் பொருளை முழுமையாக கட்டுப்படுத்தியுள்ளோம். கஞ்சா பயிர் இல்லாத மாநிலமாக உள்ளது தமிழ்நாடு.

தமிழ்நாட்டின் வளர்ச்சியை மறைக்கவே போதைப் பொருள் மாநிலம் போல் சித்தரிக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. பாஜகவினர் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜாபர் சாதிக் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது மத்திய அரசின் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர்தான். ஜாபர் சாதிக் செய்த குற்றங்கள் எதுவும் தமிழ்நாட்டில் நடக்கவில்லை வெளிமாநிலங்களில்தான்.” என்று ரகுபதி கூறினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய வில்சன் எம்.பி. கூறியதாவது, ஜாபர் சாதிக் விசாரணையில் திமுகவையும் திமுக தலைவர்களையும் சேர்த்துப் பேசுகின்றனர். போதைப் பொருள் வழக்க தொடக்க நிலையில் இருக்கும்போதே என்.சி.பி. அதிகாரி பேட்டி சந்தேகம் அளிக்கிறது. எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் பேசினால், சிவில் கிரிமினல் வழக்குகள் தொடர்வோம்.” என்றார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com