தமிழ்நாட்டில் கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஈர்க்கப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் குறித்து அப்போதும் இப்போதும் முக்கிய அதிகாரிகளாக இருக்கும் இரண்டு பேரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
நான்கு முறை வெளிநாட்டு சுற்றுப் பயணம் மேற்கொண்டு குறைவான முதலீட்டை ஈர்த்த முதலமைச்சர் உடனடியாக வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என்றும் அறிக்கை ஒன்றில் அவர் வலியுறுத்தியுள்ளார்.
”தெலுங்கானா முதலமைச்சர் (திரு. ரேவந்த் ரெட்டி) ஆகஸ்ட் 2024-ல் அமெரிக்கா சென்று சுமார் ரூ.31,500 கோடி முதலீட்டினை ஈர்த்ததாகவும், கர்நாடக தொழில் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்கள் கடந்த ஆண்டு அக்டோபரில் அமெரிக்கா சென்று சுமார் ரூ. 25 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்த்ததாகவும் செய்திகள் வந்தன. ஆனால், 17 நாள்கள் அமெரிக்காவில் தங்கி, சைக்கிள் ஒட்டி, சினிமா பார்த்து திரு. ஸ்டாலின் ஈர்த்த முதலீடு வெறும் ரூ. 7,618 கோடிதான்.” என்றும் ஸ்டாலினைப் பற்றி பழனிசாமி குறைகூறியுள்ளார்.
”மார்ச் 2022-ல் துபாய்க்கு குடும்பச் சுற்றுலா மேற்கொண்டு ஈர்த்த முதலீடு ரூ.6,100 கோடி. மே மாதம் 2023-ல் சிங்கப்பூர், ஜப்பான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஈர்த்த முதலீடு ரூ.3,233 கோடி. ஜனவரி மாதம் 2024-ல் ஸ்பெயின் சுற்றுப் பயணத்தில் ஈர்த்த முதலிடு ரூ. 3,440 கோடி. தற்போது, அமெரிக்கா சென்று ஈர்த்த முதலீடு ரூ. 7,618 கோடி ஆக, 4 முறை வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் சுமார் 2 ரூ.18 ஆயிரம் கோடி மட்டுமே முதலீடாக ஈர்க்கப்பட்டுள்ளது. இந்த முதலீடுகளைஜனவரி, 2024-ல் நடத்திய உலகத் தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் சென்னையிலேயே கையெழுத்திட்டிருக்கலாம்.” என்றும் அவர் யோசனை கூறியுள்ளார்.
ஸ்டாலின் அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன் விமான நிலையத்தில் அளித்த பேட்டியில், அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தங்களில் 10 சதவீதம்கூட நிறைவேற்றப்படவில்லை என்று விமர்சித்திருந்தார். அதற்கு பதிலளித்துள்ள பழனிசாமி, அதை நச்சுக் கருத்து என்றும் குறிப்பிட்டுள்ளார்.
”2019-ல் முதலிட்டாளர்கள் மாநாடு நடத்தியபோது, அதனை முன்னின்று நடத்தியவர் அப்போதைய தொழில்துறை செயலாளர் ஞானதேசிகன் அவர்கள். 2019 உலக முதலீட்டாளர் (ஜிம்) மாநாட்டின் சிறப்பு அலுவலராக (Special Officer) திறம்பட பணியாற்றியவர் கூடுதல் செயலாளராக இருந்த திரு. அருண்ராய், ஞானதேசிகன்-க்கு பிறகு தொழில் துறைச் செயலாளராக முருகானாந்தம் பொறுப்பேற்றார்கள். எனது தலைமையில், தொழில் துறை அமைச்சர், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், பால்வளத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் குழுவினர், வெளிநாட்டிற்குச் சென்று முதலீட்டினை ஈர்ப்பதற்கும் மற்றும் கொரோனா கால முதலீடுகளை ஈர்ப்பதற்குமான ஏற்பாடுகளை முன்னின்று செய்த அதிகாரிகள் இவர்கள்தான். 2020-ம் ஆண்டு இறுதியில் ஜிம்-1ல் போடப்பட்ட ஒப்பந்தங்களில் 72 சதவீத திட்டங்களும், ஜிம்-2ல் போடப்பட்ட ஒப்பந்தங்களில் 27 சதவீத திட்டங்களும் செயல்பாட்டிற்கு வந்தன. எனது வெளிநாட்டுப் பயணத்தின்போது போடப்பட்ட ஒப்பந்தங்களில் 41 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்தது. கொரோனா காலத்தில் ஏப்ரல், மே மற்றும் ஜூன் 2020-ல் போடப்பட்ட ஒப்பந்தங்களில், 7 மாதத்திற்குள் ரூ. 24,458 கோடி முதலீட்டில், 24 திட்டங்களைத் தொடங்கி வைத்தேன். இந்த புள்ளி விவரங்களை அரசு கோப்பில் இருந்து தெரிந்துகொள்ளலாம்.” என்றும் மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.