புதிய தலைமைச்செயலகம் கட்டுவதைக் கைவிடுங்கள் விஜய்- எடப்பாடி சொல்கிறார்

எடப்பாடி பழனிசாமி - விஜய்
எடப்பாடி பழனிசாமி - விஜய்
Published on

இப்போதைக்கு புதிய தலைமைச்செயலகம் கட்டுவது தேவையில்லை; உத்தேசிக்கப்பட்டுள்ள பட்டினப்பாக்கத்தில் அல்லாமல் வேறுஓர் இடத்தில் நிதிநிலைமை சீரானபிறகு கட்டிக்கொள்ளலாம் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை :

”புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டினப்பாக்கம் கடற்கரையை ஒட்டிய சாந்தோம் சாலையில், காலம் காலமாக வசித்து வரும் மீனவர்கள், பொதுமக்களின் குடியிருப்புகள், பள்ளிகள், வாகன போக்குவரத்து நெரிசல் என்று மிகவும் நெருக்கடியான பகுதியாகும்.

இடநெருக்கடி, வாகனப் போக்குவரத்து நெரிசல் இல்லாத இடத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்த காலங்களில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்கள்.

விவசாயிகள் பிரச்சனை, பொதுமக்களின் சமூக நலப் பிரச்சனைகள் இருக்கும் இத்தருணத்தில், கடுமையான நிதி நெருக்கடி, கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் இந்த நிலையில், கடன் வாங்கி ரூ. 1,200 கோடி செலவு செய்து பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தற்போது அவசியமற்றது.

புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டாம் என்று அ.தி.மு.க. கூறவில்லை. தமிழகத்தின் நிதிநிலை சீரான பின்பு, போக்குவரத்து நெரிசலற்ற, மக்களுக்கு பாதிப்பு இல்லாத இடத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட உத்தேசிக்கலாம். தற்போதைய நிலையில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தேவையற்றது. எனவே, இத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று முதலமைச்சர் ஜோசப் விஜய்யை வலியுறுத்துகிறேன்.” என்று பழனிசாமியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com