ஜெம் வீரமணி வழக்கில் தவறான தகவல்களை கூறுகிறார் முதல்வர் விஜய்!

Edappadi Palanisami
எடப்பாடி பழனிசாமி
Published on: 

ஜெம் வீரமணி தொடர்பாக முதலமைச்சர் விஜய் தவறான தகவலை கூறியுள்ளதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மதுராந்தகத்தில் செய்தியாளர்களை சந்தித்தப்போது அவர் பேசியதாவது:

"முதலமைச்சரின் உத்தரவின் பேரில்தான் ஜெம் வீரமணியை போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டதாக, முதலமைச்சர் விஜய் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசினார். அவருடைய கருத்து தவறானது என்று தெரியவந்துள்ளது.

தி.மு.க. ஆட்சியின்போதே பதிவுசெய்யப்பட்ட இந்த வழக்கை உரிய ஆதாரம் இல்லை என்று முடித்து வைக்கக்கோரி நீதிமன்றத்தை நாடியபோது, நீதிபதி அதற்கு மறுத்துவிட்டார்.

ஆட்சி மாற்றம் பெற்று, விஜய் முதல்வராக பதவியேற்றப் பிறகு 19.06.2026 அன்று இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது இருந்த காவல்துறை அதிகாரிகள் வாய்தா கேட்டபோது, நீதிபதி 4 வாரத்திற்குப் பிறகு இந்த வழக்கு குறித்த முழுவிவரங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

பின்னர், 27.08.2027 அன்று மீண்டும் நீதிமன்றத்திற்கு வந்தபோது தடவியல்துறையின் அறிக்கை இன்னும் வரவில்லை என்று காவல்துறை கூறியதை மறுத்த நீதிபதி, உடனடியாக ஜெம் வீரமணியை கைது செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இதிலிருந்து, நீதிமன்றத்தின் உத்தரவின்பேரிலேயே ஜெம் வீரமணி கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெளிவாகத் தெரிகிறது.

படத்தில்தான் நடிக்கிறார் என்றால், நிஜத்திலும் முதலமைச்சர் விஜய் நடித்துக்கொண்டிருக்கிறார்.

த.வெ.க. ஆட்சி பொறுப்பேற்றப் பிறகு, 250 கொலைகள், 300 பாலியல் சீண்டல்கள் நடைபெற்றுள்ளன.

இதற்கெல்லாம், மேடையிலே வீரவசனம் பேசும் முதல்வர் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?

இவருடைய ஆட்சியில் நடந்தேறிய குற்றங்களுக்கு இவர் என்ன நடவடிக்கை எடுத்தார், என்ன தண்டனை வாங்கிக் கொடுத்தார்? குற்றச்செயல்களில் ஈடுபடுவர்கள் இந்த ஆட்சியில் பயமின்றி நடமாடுகிறார்கள்." என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com