‘கொல்லைப்புறம் வழியாக முதல்வர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி…’ – செங்கோட்டையன் தாக்கு

எடப்பாடி பழனிசாமி - செங்கோட்டையன்
எடப்பாடி பழனிசாமி - செங்கோட்டையன்
Published on

நான் முன்மொழியவில்லை என்றால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆகியிருக்க முடியாது என்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ், டிடிவி தினகரனுடன் இணைந்து தேவர் ஜெயந்தி விழாவுக்கு சென்ற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கம் செய்து அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, முன்னாள் எம்பி சத்யபாமா உள்பட அவரது ஆதரவாளர்கள் 12 பேரும் இன்று கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் கோபியில் இபிஎஸ் குறித்து செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது: “கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் குறித்து எடப்பாடி பழனிசாமி ஏன் சிபிஐ விசாரணையை கோரவில்லை. என்னை பி டீம் என்று சொன்னார்கள். இதன் மூலம் யார் பி டீம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

ஓபிஎஸை 3 முறை முதல்வராக்கிய ஜெயலலிதா, இபிஎஸ்ஸை ஏன் முதல்வர் ஆக்கவில்லை. நான் முன்மொழியவில்லை என்றால் இபிஎஸ் முதல்வர் ஆகியிருக்க முடியாது. தன்னை முதல்வராக்கிய சசிகலாவையே கொச்சைப்படுத்தினார் இபிஎஸ்.

கொல்லைப்புறம் வழியாக முதல்வர் ஆனவர் என்பது நாடறிந்த ஒன்று. டிடிவி தினகரன் தரப்பு எம்எல்ஏக்களால் முதலமைச்சர் ஆனபிறகு, அவரையும் கட்சியில் இருந்து நீக்கினார். இபிஎஸின் மகன், மருமகன், மாப்பிள்ளை ஆகியோர் தான் கட்சியை நடத்தினர். ஒருவர் முன்னேற தன் காலில் நடந்து செல்ல வேண்டும். பிறரின் முதுகில் ஏறி சவாரி செய்யக் கூடாது.

அவர் உழைத்தவர்களை விட்டு விட்டு பணக்காரர்களுக்கு எம்பி சீட் கொடுத்தார். நான் கோபிச்செட்டி பாளையத்திற்கு ஏதும் செய்யவில்லை என்று இபிஎஸ் கூறியிருப்பது வேதனை அளிக்கிறது. அதிமுக ஆட்சியை பாதுகாத்த பாஜவின் உறவை முறித்தார். 2031 வரை பாஜவுடன் கூட்டணியே கிடையாது என்றார்.

ஓபிஎஸ், டிடிவி தினகரனை சந்திக்கவே தேவர் ஜெயந்தி விழாவுக்கு சென்றேன். பாஜவினர் தான் என்னை அழைத்து, பிரிந்தவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியை செய்யச் சொன்னார்கள். சட்டமன்றத்தில் இபிஎஸ் பின்னால் தான் உட்கார்ந்திருந்தேன். என்ன குறை என ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை.” இவ்வாறு அவர் கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com