
த.வெ.க. அரசு ஆட்சியமைத்து 6 மாதம் ஆனபோதும், மக்களுக்கு பயனளிக்கும் வகையில் எந்தவொரு திட்டத்தையும் அறிவிக்கவில்லை என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
சேலத்தில் அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது:
"தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு அடியோடு சீரழிந்துவிட்டது. இந்த த.வெ.க. அரசு கும்பகர்ணன்போல தூங்கிக்கொண்டிருப்பதால், தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கொலைச் சம்பவங்கள் அரங்கேறிக்கொண்டு இருக்கின்றன. அதனைத் தடுக்கத் திராணியற்று உள்ளது இந்த அரசாங்கம்.
அதேபோல, மாநிலம் முழுவதும் கிராமம் முதல் நகரம்வரை அமோகமாக போதைப்பொருள் விற்பனை நடப்பதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. கொலை, கொள்ளை, பாலியல் சீண்டல்கள் ஆகியவை தமிழகத்தில் அதிகரித்துக் காணப்படுவதற்கான முக்கிய காரணம் போதைப்பொருள் பயன்படுத்துபவர்களால்தான்.
தற்போது லாட்டரிச் சீட்டு விற்பனையும் தமிழகத்தில் அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைக் காவல்துறை அதிகாரிகள் கவனத்தில் எடுத்துக்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்டப்பேரவையில் பேசும்போது, தமிழ்நாட்டில் 6 மாதங்களில் சிறப்பான ஆட்சியை வழங்குவோம் என்று பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறினார். ஆனால், சிறப்பான ஆட்சியை அவர்கள் தரவில்லை; மக்களுக்குத் துயரமான ஆட்சியைத்தான் வழங்கிவருகிறார்கள்.
த.வெ.க.விற்கு ஆதரவு தெரிவிக்கும் இடதுசாரிகள்கூட சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்று குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.
தமிழகத்தில் தீபாவளியின்போது 11 கொலைகள் நடைபெற்றதாகச் செய்திகள் வெளியாகின. இதற்கு, இந்த ஆட்சியில்தான் கொலை நடக்கிறதா என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ஒப்பிடுகிறார்.
இதனைத் தடுத்து நிறுத்தவேண்டிய பொறுப்பில் இருக்கும் அரசாங்கம், இவ்வாறு குற்றச் சம்பவங்களை ஒப்பிடுவது சரியல்ல. பொருளாதாரம் குறித்து ஒப்பிடலாம். ஆனால் கொலைகள் குறித்து ஒப்பிடுவது ஒரு நல்ல அரசாங்கத்திற்கு அழகல்ல." என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.