தி.மு.க. அரசின் ஊழல்களைத் தொடர்ந்து மக்களிடத்தில் அம்பலப்படுத்தும் சவுக்கு மீடியா ஊடகத்தை முடக்கும் முனைப்பில் அந்நிறுவன ஊழியர்கள், வாசகர்களைக் குறிவைத்து காவல்துறையை ஏவி பொய் வழக்குகளில் கைதுசெய்யும் அரசு அராஜகப் போக்கில் ஈடுபட்டுள்ளது என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அற்க்கையில், “ ஊடகங்கள், பத்திரிகைகளை தன் கைகளுள் வைத்துக்கொண்டு, தான் ஏதோ நல்லாட்சி வழங்குவது போல ஒரு பொய் பிம்பத்தை உருவாக்கி, அந்த மாய உலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் திளைத்துக் கொண்டிருப்பதை நான் அடிக்கடி சுட்டிக்காட்டி வந்துள்ளேன். அதையும் மீறி சில ஊடகங்கள் இந்த விடியா ஆட்சியின் அவலங்களை மக்களிடத்தில் அம்பலபடுத்தினால், தன் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையை ஏவி பொய் வழக்குகளால் முடக்க முயற்சிப்பது திமுகவிற்கே உரித்தான அராஜக பாசிச குணம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ”சவுக்கு மீடியாவின் ஊழியர்கள், வாசகர்கள் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சி ஏவல்களை உடனடியாகக் கைவிட்டு, மக்களாட்சியின் நான்காம் தூணான ஊடகங்கள், பத்திரிகைகளின் சுதந்திரமான செயல்பாட்டை உறுதிசெய்யுமாறு முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.”என்றும் பழனிசாமியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.