கல்வியாளரும் முன்னாள் துணைவேந்தருமான வசந்தி தேவி அம்மையார் சென்னையில் இன்று பிற்பகல் காலமானார். அவருக்கு வயது 86.
சென்னை, வேளச்சேரியில் வசித்துவந்த அவர், சீரான உடல்நலத்துடன் முதுமையிலும் கல்விப்பணிகளில் ஈடுபட்டுவந்தார். வீட்டில் இருந்தபோது பிற்பகல் 3.30 மணியளவில் மாரடைப்பால் அவரின் உயிர் பிரிந்தது.
பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கத்தின் தலைமைப் பொறுப்பில் செயலாற்றிவந்தவர், கல்விக்கொள்கைகள், பாடத்திட்டம், அரசு- பொதுப்பள்ளி முறையில் செய்யவேண்டிய சீர்திருத்தங்கள், கல்வித் துறையில் ஜனநாயகம் ஆகியவற்றுக்காக இடைவிடாமல் குரல்கொடுத்துவந்தார்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இவர் இருந்தபோது, கல்வித் துறையில் நியமனங்களுக்கு இலஞ்சம் போன்ற பல்வேறு முறைகேடுகளைத் தடுத்துநிறுத்தினார். 1998இல் அங்கிருந்து ஓய்வுபெற்றவர், தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் 2002ஆம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகள் பணியாற்றி பெருமைசேர்த்தார்.
உயர்கல்வியில் பல்வேறு மாற்றங்களையும் புகுத்தி பெயர் பெற்றார்.
முன்னதாக, கல்லூரி ஆசிரியராக இருந்த காலத்தில் மாநில அளவில் பொறுப்புகளை ஏற்று திறம்படச் செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.