
இருபது மெகாவாட் உற்பத்தித் திறனுக்கு மேலான சூரிய மின்னுற்பத்தி நிலையங்கள் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதை கட்டாயமாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அவ்வியக்கம் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கை:
”ஒன்றிய அரசின் புதிய, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம் செப்டம்பர் 2025இல் இந்தியாவின் சூரிய மின்னுற்பத்திக்கான சாத்தியக்கூறுகள் குறித்த அறிக்கை (Solar PV Potential of India – Ground Mounted) ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் நாடு முழுவதும் 27,571 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் சூரிய மின்னுற்பத்தி நிலையங்கள் அமைப்பதன் மூலம் 3,343GW மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் எனக் குறிப்பிடுகிறது. இந்த ஒட்டுமொத்த ஆய்வுமே வறண்ட மற்றும் தரிசு நிலங்களின் சூரிய மின்னுற்பத்தித்திறனை மையமாகக் கொண்டே மேற்கொள்ளப்பட்டுள்ளது. வேளாண் நிலங்கள், காடுகள், சுற்றுச்சூழல் நொய்மை மண்டலங்கள் (Eco Sensitive Area) இதில் தவிர்க்கப்பட்டன.
அவ்வறிக்கையின்படி தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் 58.27% நிலமானது வேளாண் பயன்பாட்டில் உள்ளது. 14.51% காடுகளாகவும் 7.70% நிலம் நீர்நிலைகளாகவும் உள்ளன. 10.44% நிலங்கள் வீணடிக்கப்பட்ட பாழ்நிலமாக அல்லது வறண்ட நிலமாக இருக்கின்றன. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள இவ்வகை நிலங்களிலிருந்து 204.7 GW சூரிய மின்னாற்றலை உற்பத்தி செய்ய முடியும். தமிழ்நாட்டின் சூரிய மின்னாற்றல் நிறுவுதிறன் தற்போது 10.15 GWஆக இருக்கிறது. ஒன்றிய அரசின் சூரிய மின்னாற்றலுக்கான சாத்தியக்கூறு தொடர்பான அறிக்கையே வேளாண் நிலங்கள் அல்லாத பிற வறண்ட நிலங்களின் சூரிய மின்னாற்றலை மட்டும்தான் கணக்கிட்டுள்ளது.
ஒவ்வொரு நிலத்தின் அமைப்பைப் பொருத்தும் சோலார் அமைப்பதற்கான நிலத்தின் அளவு மாறுபடும். தமிழ்நாட்டில் 1 MW சூரிய மின்னுற்பத்தி நிலையம் அமைக்க 1.44 ஏக்கர் நிலம் தேவைப்படும் என்கிறது இவ்வறிக்கை. ஆனால், பொதுவாக 5 முதல் 6 ஏக்கர் வரையிலான நிலம் தேவைப்படும் என்கிறது ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஆவணம் ஒன்று. அதிக உற்பத்தித்திறன் கொண்ட சூரிய மின்னுற்பத்தி நிலையங்களுக்கு பெரியளவிலான நிலங்கள் தேவைப்படுகின்றன. இந்தியா முழுவதும் பல இடங்களில் அமைக்கப்பட்டு வரும் பெரிய சோலார் பூங்காக்கள் விவசாய மற்றும் மேய்ச்சல் நிலங்களில் அமைக்கப்படுகின்றன. இதன் காரணமாக அண்மைக் காலங்களில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் ஒருபுறம் வேளாண் உற்பத்திக் குறையும் அபாயம் எழுந்துள்ளது. மறுபுறம் நிலங்கள் துண்டாடப்படுவதால் மேய்ச்சல் சமூகத்தினர் தங்கள் கால் நடைகளுக்கு உணவளிக்க முடியாமல் திணறுகின்றனர். கூடவே நிலத்தடி நீர்மட்டமும் குறைகிறது.
தொடக்கத்தில் சூரிய மின்னுற்பத்தி நிலையங்களுக்கு ஒன்றிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை 2006இன் (Environmental Impact Assesment EIA -2006)- கீழ் சுற்றுச்சூழல் முன் அனுமதி (Environmental Clearance – EC) பெறுவது கட்டாயமாக இருந்தது.
2011ஆம் ஆண்டு ஒன்றிய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை அமைச்சகம் 30.06.2011 தேதியிட்ட அலுவல் உத்தரவின் மூலம் சூரிய மின்னுற்பத்தி நிலையங்கள் பிற மின்னுற்பத்தி நிலையங்களைவிடக் குறைவான நீரைப் பயன்படுத்துவதாலும் குறைந்த அளவிலான மாசை மட்டுமே வெளியிடுவதாலும் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதிலிருந்து விலக்களிக்கப்பட்டது.
எனினும் மாநில மாசு கட்டுப்பாடு வாரியங்கள் சூரிய மின்னுற்பத்தி நிலையங்களுக்கு நீர் மற்றும் காற்று மாசுபாடு தடுப்புச் சட்டங்களின்கீழ் இசைவாணை (Consent to Establish – CTE) வழங்கும் முன்னர் நேரில் ஆய்வுசெய்து சூரிய மின்னுற்பத்தி நிலையமானது ஈரநிலம், வேளாண் நிலம், சுற்றுச்சூழல் நொய்மைப் பகுதி (eco sensitive area), உயிர்ப்பன்மையம் நிறைந்த பகுதி, பெரிய வாழிடப்பகுதி ஆகியவற்றில் அமைக்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியது.
மேலும், நீர்வளத் துறை, கேடுதரும் பொருட்கள் மேலாண்மை (Hazarduos Substance Management) விதிகள் ஆகியவற்றின் கீழ் உரிய முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும் எனவும் 2011 வெளியிடப்பட்ட ஒன்றிய அரசின் அலுவல் உத்தரவு வலியுறுத்துகிறது.
ஆனால், அண்மைக் காலங்களில் தமிழ்நாட்டில் அமைக்கப்படும் பெரிய அளவிலான சூரிய மின்னுற்பத்தி நிலையங்கள் வேளாண் நிலங்களிலும், மேய்ச்சல் நிலங்களிலும் நீர்நிலைகளை நிரப்பியும், அமைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக இராமநாதபுரம் கமுதியில் அதானி நிறுவனத்தால் அமைக்கப்பட்ட 648 MW சூரிய மின்னுற்பத்தி நிலையத்திற்கு தங்களது நிலங்களை ஏமாற்றி வாங்கியதாக மக்கள் குற்றஞ்சாட்டினர்.
தென்காசியில் ஆலங்குளம், நெல்லையில் மானூர், புதுக்கோட்டையில் கந்தர்வக்கோட்டை, தேனியில் பூமலைக் குண்டு, தூத்துக்குடி மாவட்டத்தின் ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி, கயத்தாறு, திண்டுக்கல்லில் நிலக்கோட்டை, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள நெப்பத்தூர், பெருந்தோட்டம், திருவாரூரில் முத்துப்பேட்டையில் உள்ள பெருகவாழ்ந்தான் என இன்னும் பல ஊர்களில் விவசாய நிலங்களில் சூரிய மின்னுற்பத்தி நிலையங்கள் அமைப்பதைக் கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வேளாண் நிலத்தை வேளாண் அல்லாத பிற தொழிலுக்காகப் பயன்படுத்துவதற்கு வேளாண்மைத் துறையின் தடையில்லாச் சான்று பெற்று மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்பது விதியாகும். 5 ஆண்டுகளுக்கு மேல் விவசாயம் செய்யப்படாத நிலம் என்றால் மட்டுமே இவ்வனுமதி கிடைக்கும்.
மேலும் சூரிய மின்னுற்பத்திப் பூங்கா அமைப்பதற்குத் தமிழ்நாடு மின்வாரியம், மாசு கட்டுப்பாடு வாரியம் உட்பட்ட பல்வேறு துறைகளிடம் முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும். இப்படியான எவ்வித அனுமதிகளையும் பெறாமல் செழிப்பான விவசாய நிலத்தில் திடீரென சூரிய மின்னுற்பத்தித் தகடுகளை அமைக்கும் முயற்சியில் தனியார் நிறுவனங்கள் ஈடுபடுவதை மக்களின் போராட்டங்கள் வாயிலாக அறிய முடிகிறது.
தமிழ்நாட்டில் சிப்காட்டிற்கு அடுத்தபடியாக விவசாய நிலங்களை அழிக்கும் தொழில் வளர்ச்சித் திட்டமாக சூரிய மின்னுற்பத்தி நிலையங்கள் மாறி வருகின்றன. தமிழ்நாடு காலநிலை மாற்றத்தை அதிகம் எதிர்கொள்ளும் ஒரு மாநிலமாக உள்ளது. புவி வெப்பமயமாதலால் வறட்சியையும், பெருமழை வெள்ளத்தையும் மாறி மாறி எதிர்கொண்டு வருகின்றனர் விவசாயிகள். இதனால் வேளாண் தொழில் நிச்சயமற்ற ஒன்றாக மாறியுள்ளது.
நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்குச் சென்றுவருகிறது. புவி வெப்பமயமாதலின் தாக்கத்தைக் குறைக்க அதிக பசுமை இல்ல வாயுக்களை உமிழும் மின்னுற்பத்தி முறையைக் கைவிட்டு சூரிய மின்னுற்பத்தி முறைக்கு மாறுவது மிக அவசியமான ஒன்றுதான். ஆனால், இம்மாற்றம் யாரையும் பாதிக்காத, அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய ஒன்றாக அமையவேண்டும்.
குறிப்பாக வேளாண் நிலங்களும் மேய்ச்சல் நிலங்களும் அழிவது மாநிலத்தின் பசுமைப் பரப்பைக் குறைக்கிறது. இது உள்ளூர் அளவில் வெப்பநிலையை அதிகரிக்கிறது.
2021ஆம் ஆண்டு தி.மு.க. தலைமையிலான தமிழ்நாடு அரசு அடுத்த பத்தாண்டுகளில் 20,000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யவிருப்பதாக அறிவித்து, அது தொடர்பான ஆலோசனைகளைப் பெற இந்திய மரபுசாரா எரிசக்தி மேம்பாட்டு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது.
அப்போது சூரிய மின்னுற்பத்தி நிலையங்கள் ஒவ்வொன்றையும் 5MW இல் இருந்து 20MW-க்குள் இருக்கக்கூடிய பரந்துபட்ட மின்னுற்பத்தி நிலையங்களாக அமைக்கவே திட்டமிட்டிருந்தது. இதற்கான தகுந்த நிலங்களைத் தேர்வுசெய்து அனுப்புமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களையும் மின்வாரியம் கோரியிருந்தது. மாநில அரசே சூழலுக்குகந்த வழியில் சூரிய மின்னுற்பத்தி நிலையங்கள் அமைப்பது என்கிற முடிவுடன் இருக்கையில் தனியார் நிறுவனங்கள் பெரிய அளவிலான சூரிய மின்னுற்பத்தி நிலையங்களை வேளாண் நிலங்களை அழித்து அமைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
1500 வீடுகளைக் கொண்ட ஒரு கிராமத்திற்கு அதிகபட்ச மின்தேவை என்பது 1 MWதான். அதற்கு 4 முதல் 6 ஏக்கர் நிலம் இருந்தால் போதுமானது. அந்த ஊரிலே மின்சாரம் தயாரித்து அந்த ஊரிலே விநியோக்கிக்கப்படும்போது மின்னிழப்பைத் (transmission loss) தவிர்க்க முடியும். ஆனால் தற்போதுள்ள குவிக்கப்பட்ட பெரியளவிலான சூரிய மின்னுற்பத்தியில் transmission loss 25% வரை உள்ளது. அதாவது உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் நான்கில் ஒரு பங்கு வீணடிக்கப்படுகிறது.
எந்தத் தனியார் நிறுவனமும் அரசிற்கு மின்சாரத்தை மலிவு விலைக்கு கொடுக்கப் போவதில்லை. கொள்ளை இலாபதிற்குத்தான் விற்கும். அதானி நிறுவனம் தனது சூரிய மின்சாரத்தை ஒரு யூனிட் 7 ரூபாய்க்கு விற்கிறது. இதனால் அரசிற்கும் நட்டம்தான்.
அதானி நிறுவனத்திடமிருந்து யூனிட் 7 ரூபாய்க்கு சூரிய மின்சாரத்தை வாங்கும் அரசு, மக்களின் வீட்டு மாடியில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தை 3 ரூபாய்க்கு வாங்கினால்கூட அனைவரும் தங்களின் வீட்டு மாடியில் சூரியத் தகடுகளைப் பொருத்துவார்கள். இதன்மூலம் பெரிய அளவிலான சூரிய மின்னுற்பத்தி நிலையங்களின் தேவையைக் குறைக்கலாம்.
2011ஆம் ஆண்டு சூரிய மின்னுற்பத்தி நிலையங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதிலிருந்து விலக்களித்தபோது இருந்த புவி வெப்பமயமாதலின் தீவிரம் தற்போது பன்மடங்கு அதிகரித்துள்ளது. அண்மையில் வெளியான HotHouse Earth Trajectory Report எனும் அறிக்கை கடந்த காலங்களில் புவியின் சராசரி வெப்பநிலை உயர்வானது 20ஆம் நூற்றாண்டின் பாதியில் பத்தாண்டு காலத்திற்கு 0.05°C இருந்த நிலையில், இன்றைக்கு பத்தாண்டு காலத்திற்கு 0.31°C ஆக உயர்ந்துள்ளது.
இது புவி வெப்பமயமாதலின் வேகம் அதிகரித்துள்ளதை உணர்த்துகிறது. புவி வெப்பநிலையில் ஏற்படும் மிகக்குறைந்த அளவிலான உயர்வும் பேரிடர்களின் தீவிரத்தையும் எண்ணிக்கையும் அதிகரிக்கவல்லது. இப்படியான நிலையில் இயற்கை அரண்களாகவும் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதாகவும் இருக்கிற நிலங்களின் பசுமைப் பரப்பு குறைவதை நாம் அனுமதிக்க முடியாது.
ஒரே இடத்தில் 200-300 ஏக்கர் விவசாய நிலத்தை அழித்து சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை அமைத்தால் 30-40 ஆண்டுகள் கழித்து காலநிலை மாற்றத்தினால் ஏற்படப்போகும் வெப்ப உயர்வு, நீர்த்தட்டுப்பாடு, உணவு உற்பத்தி பாதிப்பு ஆகிய பிரச்னைகளை அக்கிராமம் இப்பொழுதே எதிர்கொள்ள நேரிடும்.
இவற்றைக் கருத்தில்கொண்டு தமிழ்நாடு அரசு கீழ்காணும் சில கொள்கை முடிவுகளை எடுக்கவேண்டும் என வலியுறுத்துகிறோம்.
வேளாண் மற்றும் மேய்ச்சல் நிலங்களில் சூரிய மின்னுற்பத்தி நிலையங்கள் அமைக்க அனுமதிக்கக் கூடாது.
20 மெகாவாட் உற்பத்தித்திறனுக்கு மேலான சூரிய மின்னுற்பத்தி நிலையங்கள் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதை கட்டாயமாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
2021ஆம் ஆண்டு அறிவித்தபடி மாவட்ட வாரியாக பரந்துபட்ட அளவில் சூரிய மின்னுற்பத்தி நிலையங்களை அரசே அமைக்க வேண்டும்.” என்று பூவுலகின் நண்பர்கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.