தேர்தல் நடத்தை விதிகள்: இதுவரை ரூ.1.26 கோடி பறிமுதல் – அர்ச்சனா பட்நாயக் தகவல்

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்
Published on

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலாகி உள்ள ஒரே நாளில் ரூ.1.26 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதிகள் நேற்று (மார்ச் 15) அறிவிக்கப்பட்டன. இந்திய தேர்தல் ஆணையத்தால் 2026-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (மார்ச் 16) சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் தற்போது 5.69 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, மாநிலம் முழுவதும் கண்காணிப்புப் பணிகளுக்காக 2,106 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று முதலே அமலுக்கு வந்துள்ளன. அரசியல் கட்சியினர் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பரப்புரை செய்யலாம்.

தமிழகத்தில் மார்ச் 30-ஆம் தேதி முதல் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். மார்ச் 31, ஏப்ரல் 3 மற்றும் ஏப்ரல் 5 ஆகிய விடுமுறை நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது. மற்ற நாட்களில் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே மனுக்களைத் தாக்கல் செய்ய முடியும்.

வாக்களிக்கும் இடத்திற்குள் செல்போன்களைக் கொண்டு செல்ல அனுமதி இல்லை. வாக்காளர்களின் வசதிக்காகச் செல்போன்களைப் பாதுகாப்பாக வைக்க பெட்டக வசதி செய்து தரப்படும். மேலும், வாக்குச் சாவடிகளில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தரப்படும்.

பறக்கும் படையினர் சோதனையின் போது பொதுமக்களைத் தொந்தரவு செய்யக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் பணம் வைத்திருந்தாலும், அதற்குரிய ஆவணங்களைச் சமர்ப்பித்தால் உடனடியாகப் பணத்தைத் திரும்ப ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தேர்தல் விதிமுறைகள் அமலானதிலிருந்து தற்போது வரை, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.26 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேசமயம், பெரிய அளவிலான டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளும் தீவிரமாகக் கண்காணிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com