ஓபிஎஸ்
ஓபிஎஸ்

போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்!- ஓபிஎஸ்

போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:

”அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 15-வது ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து தொழிற்சங்கங்களுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி ஓரிரு மாதங்களில் அவற்றிற்கு உரிய தீர்வு காண வேண்டும் என கடந்த 01-01-2024 அன்று எனது அறிக்கையின் வாயிலாக அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

இது தொடர்பாக, 03-01-2024 அன்று தொழிலாளர் இணை ஆணையர் முன்பு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், நிர்வாகத்தின் சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டதாகவும், தொழிற்சங்கங்களின் சார்பில் போக்குவரத்து பணியாளர்களுக்கான 15-வது ஊதிய ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைக்கான தேதி மற்றும் நீண்ட நாள்களாக வழங்கப்படாத ஒய்வு பெற்ற தொழிலாளர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தேதியை உடனடியாக அறிவிக்க வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கு அரசு தரப்பில் எந்தவித உத்தரவாதமும் வழங்கப்படாத நிலையில் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்த தொழிற்சங்கங்கள், 09-01-2024 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளன.

தொழிற்சங்கங்களுடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ள நிலையில், தொழிற்சங்கங்களை அழைத்து போக்குவரத்துத் துறை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல், வேலை நிறுத்தம் நடந்தாலும், பொங்கல் பண்டிகையின் போது அரசு பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் இறுமாப்புடன் அறிவித்து இருக்கிறார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது தொழிலாளர் விரோத மற்றும் தொழில் அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கை. போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தொடர்ந்தால், பொங்கல் பண்டிகையின்போது பேருந்துக் கட்டணம் விமானக் கட்டணத்தை மிஞ்சும் நிலை உருவாகும். அமைச்சரின் இதுபோன்ற அறிவிப்பால் பாதிக்கப்படுவது பொங்கல் பண்டிகையை சொந்தங்களுடன் கொண்டாடவிருக்கும் ஏழையெளிய தமிழக மக்களும், போக்குவரத்துத் தொழிலாளர்களும்தான். இருப்பினும், தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் உறுதியாக இருப்பதால், 08-01-2024 அன்று முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு தொழிலாளர் ஆணையரகம் அழைப்பு விடுத்துள்ளது.

2017 ஆம் ஆண்டு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டபோது அப்போதைய முதல்வர் போக்குவரத்து தொழிலாளர்களை எச்சரித்ததைக் கண்டித்த அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர், தொழிற்சங்கங்களுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்றும், புதிய ஊதிய உயர்வு குறித்து உறுதி அளிக்க வேண்டுமென்றும், தொழில் அமைதி பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ஆனால், முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, முன்னாள் முதல்வர் பின்பற்றிய அதே பாணியை பின்பற்றுகிறார். இதிலிருந்து முந்தைய முதல்வரும், தற்போதைய முதல்வரும் தொழிலாளர் விரோதப் போக்கில் ஒரே கொள்கையை கொண்டுள்ளது என்பது தெளிவாகிறது. இதன் காரணமாக, பொதுமக்களும், அரசு போக்குவரத்துத் தொழிலாளர்களும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. முதல்வர் தலையிட்டால்தான் பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

எனவே, பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையிலும், அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கும் வகையிலும், அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களை முதல்வர் அழைத்துப் பேசி, 15-வது புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையினை துவங்கவும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கவும் உடனடி நடவடிக்கை எடுத்து, காலவரையற்ற வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.” என்று பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com