பா.ஜ.க.வினுடைய அணிகளாக அமலாக்கத்துறையும், வருமான வரித்துறையும் இருப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரும் கையெழுத்து இயக்கத்துக்காக சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சித் தலைவர்களைச் சந்தித்து அவர்களிடம் கையெழுத்தைப் பெற்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதியிடம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் நடைபெற்று வரும் வருமான வரித்துறை சோதனை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அமைச்சர் உதயநிதி, “தி.மு.க., காங்கிரசில் இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி என்று பல்வேறு அணிகள் உள்ளது. அப்படி, பா.ஜ.க.வின் அணிகள்தான் வருமானவரித்துறை, அமலாக்கத் துறை போன்றவை. அவர்கள் அவர்களுடைய பணியை செய்துக் கொண்டிருக்கின்றனர். அதை சட்டப்படி எதிர்கொள்வோம்.
கடந்த இரண்டு மூன்று மாதங்களாகவே பா.ஜ.க. அணிகளின் செயல்பாடுகள் அதிகமாக இருக்கிறது.” என்றார் அமைச்சர் உதயநிதி.