அமலாக்கத் துறை
அமலாக்கத் துறை

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை ரெய்டு!

மணல் குவாரிகளில் அதிக அளவில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, சென்னை, புதுக்கோட்டை, திண்டுக்கல், நாமக்கல், திருச்சி உள்பட்ட 10 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள், தற்போதைய அரசு அதிகாரிகள், முன்னாள் அரசு அதிகாரிகள், ஆடிட்டர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல்லில் 3 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தொழிலதிபர் ரத்தினம், அவரின் மைத்துனருக்குச் சொந்தமான வீடுகள், மற்றொரு தொழிலதிபர் கோவிந்தன் என்பவர் வீட்டிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

புதுக்கோட்டையில் தொழிலதிபர் ராமச்சந்திரன் என்பவரின் அலுவலகம் முதலிய ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப். படையினரின் பாதுகாப்புடன் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதேபோல, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், கரூர், திருச்சி, விளாத்திகுளம் ஆகிய ஊர்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

தலைநகர் சென்னை, அண்ணா நகரில் உள்ள ஆடிட்டர் சண்முகராஜ் என்பவர் வீட்டிலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கிழக்கு முகப்பேர் பகுதியில் உள்ள பொதுப்பணித் துறை பொறியாளர் திலகம் என்பவர் வீட்டிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் செல்போனில் உள்ள புகைப்படத்தைக் காட்டி வீடுவீடாகச் சென்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com