உலகம் முழுவதும் நாளை ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடப்படும் நிலையில், தமிழக முதல்வர் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
புதிய சிந்தனை, புதிய இலக்குகளுக்கான வாசலைத் திறந்து வைத்து நம்பிக்கையின் ஔிக்கதிர்களுடன் பிறக்கிறது இனிய புத்தாண்டு!
பெரியார், அண்ணா, கலைஞர் வழியில், சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதிக்கான பயணத்தில் எத்தனை தடைகள் எதிர்ப்பட்டாலும் அவற்றைத் தகர்த்தெறிந்து முன்னேறும் நமது திராவிட மாடல் அரசின் வெற்றிப் பயணம், வரும் புத்தாண்டில் புதிய சாதனை உச்சங்களைத் தொடும்.
அதற்கான நம்பிக்கையும் உறுதியும் புத்தாண்டில் நிறைந்துள்ளது. “எல்லார்க்கும் எல்லாம்” என்ற நமது இலட்சியம் நிறைவேறும் நிறைவான ஆண்டாக இந்தப் புத்தாண்டு அமையட்டும்! அனைவருக்கும் எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
2023-ம் ஆண்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) விடைபெறுகிறது. நாளை நள்ளிரவு 12 மணிக்கு பிறக்கப்போகும் 2024-ம் ஆண்டை வரவேற்க உலகமே தயாராகி வருகிறது. நாடு முழுவதும் நாளை நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்ட உள்ளன.
தமிழகத்திலும் அனைத்து மாவட்டங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எடப்பாடி பழனிசாமி - அ.தி.மு.க. பொதுச்செயலர்
புலரும் புத்தாண்டை மலர்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
மலருகின்ற புத்தாண்டில் மக்களுடைய துன்பங்கள் விலகி இன்பங்கள் பெருகவும் அனைவரது வாழ்விலும் அன்பையும், மகிழ்ச்சியையும், நோய் இல்லாத வாழ்வையும் குறைவில்லாத செல்வத்தையும் வழங்கும் ஆண்டாக அமையவும், எல்லாம் வல்ல இறைவனை மனதார பிரார்த்தித்து, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது நல்வழியில் மக்கள் அனைவருக்கும் உளங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்.
கே.எஸ்.அழகிரி - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்
பாஜக ஆட்சியில் மக்கள் படும் துன்பங்களில் இருந்து விடுவிக்க தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை முதல்கட்ட இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டார். அந்த பயணத்தின் மூலம் பாஜகவுக்கு எதிராக 28 கட்சிகள் ஒன்று சேர்ந்து இண்டியா கூட்டணியை அமைத்திருக்கின்றன. அதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் மீண்டும் பாரத நியாய யாத்திரையை ஜனவரி 14 ஆம் தேதி ராகுல்காந்தி மணிப்பூரில் தொடங்கி, மார்ச் 20 அன்று மும்பையில் நிறைவு செய்கிறார். இந்த நடைபயணத்தின் மூலம் பாஜக ஆட்சி அகற்றப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. இந்த நம்பிக்கையின் தொடக்கமாக வருகிற ஆங்கில புத்தாண்டு அமைய இருக்கிறது.
இராமதாஸ் – பா.ம.க. நிறுவனர்
நாம் கடந்து வந்த கரடுமுரடான பாதைகள் முடிவுக்கு வந்து விட்டன. புத்தாண்டில் புதிய பாதை தெரியும்; புதிய வெளிச்சம் பிறக்கும். அவற்றின் உதவியுடன் 2024 ஆம் ஆண்டு நாம் எதிர்பார்த்ததைப் போலவே இனிப்பாக அமையும். அனைவருக்கும் அனைத்து நலன்களும், வளங்களும் கிடைக்கும்; பொருளாதாரம் வளரும்; மகிழ்ச்சி பெருகும்; அமைதியும், நிம்மதியும் கிடைக்கும்; அவற்றை சாதிக்க நாம் கடுமையாக உழைப்போம் என்று கூறி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இரா. முத்தரசன் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
பரபரப்பும், பதற்றமும் நிறைந்ததும், சாதனை முத்திரை பதித்ததும், நம்பிக்கை விதை முளைத்து, அது வளமாக வளர்ந்து வரும் காலத்தின் அடையாளமாக விளங்கிய 2023 ஆம் ஆண்டு விடை பெறுகிறது.
அடுத்து வரும் 2024 ஆம் ஆண்டு, பத்தாண்டுகளுக்கு முன்பு வலது பக்கம் திருப்பப்பட்ட, அரசியல், சமூக, பொருளாதார திசை வழி, மீண்டும் ஜனநாயக மைய நீரோட்டத்திற்கு திருப்பப்படும் ஆண்டாக அமைய வேண்டும் என விழைகிறோம்.
நாட்டின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு வழி வகுக்கும் ‘இண்டியா’ கூட்டணி வகுப்புவாத இருள் நீக்கும் நம்பிக்கை ஒளிச் சுடராக எழுந்து வருகிறது. இது 2024 ஆம் ஆண்டில் அதிகாரத்தை கைப்பற்றி, நாட்டின் மதச்சார்பற்ற மாண்பையும், வேற்றுமையில் ஒற்றுமை காணும் மரபையும் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையோடு வரும் 2024 - ஆங்கில புத்தாண்டில் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.
கி.வீரமணி - திராவிடர் கழகத் தலைவர்
நகரும் ஆண்டு பல சோதனைகளும், வேதனைகளும் தந்த ஓர் ஆண்டாகி முடிந்துள்ளது.
பிறக்கும் புத்தாண்டு வேதனைகளும், சோதனைகளும் இல்லாத ஓராண்டாக, ஜனநாயகம், பகுத்தறிவு, சமூகநீதி, சமத்துவ ஒளி தரும் ஆண்டாகப் பூத்து
மலரட்டும்! மக்களை மகிழ்ச்சியடையச் செய்யும் ஆண்டாக சிறக்கட்டும் என வாழ்த்தி, அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்!
கே. பாலகிருஷ்ணன் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் ) சார்பில் தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். மக்கள் அனைவரும் எல்லா வளங்களும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டுமென வாழ்த்துகிறோம்.
மனித நேயம், மதச்சார்பின்மை, சமூக நீதி, நாடாளுமன்ற ஜனநாயகம், மாநில உரிமைகள் ஆகிய அனைத்தையும் கபளீகரம் செய்யும் ஒன்றிய பாஜக அரசு மதவெறியை பரப்பி மக்களை கூறுபோடும் பாசிச எண்ணத்துடன் செயல்பட்டு வருகிறது. அதனை வீழ்த்தும் சாதனை மிக்க ஆண்டாக 2024 அமைந்திட வேண்டுமென்ற நம்பிக்கையோடு புத்தாண்டை வரவேற்போம்.
வைகோ – ம.தி.மு.க. பொதுச்செயலாளர்
“பனிக் காலம் வந்தால், வசந்த காலம் வராமலா போகும்” ஒரு ஆங்கிலக் கவிஞனின் கவிதை இது.
இந்தியாவின் ஜனநாயகத்தைக் காப்போம்; கூட்டாட்சிக் கொள்கையைக் காப்போம்; மதச்சார்பின்மையைக் காப்போம் என சூளுரைத்து அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கமல்ஹாசன் – மநீம தலைவர்
பிறக்கவிருக்கிறது புதிய ஆண்டு. அர்ப்பணிப்புணர்வுடன் தொடர்ச்சியான செயல்பாடுகளால், தளராத முயற்சிகளால் புதிய உயரங்களை அடையும் வாய்ப்பாக புத்தாண்டை ஆக்குவோம். புதுப்பொலிவை, புது வளர்ச்சியை, புதுச் சவால்களை, புது வெற்றிகளை எதிர்கொள்வோம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.