ஊட்டி- உதகை மலைப்பாதை
ஊட்டி- உதகை மலைப்பாதை

இ-பாஸ் மூலம்தான் ஊட்டி, கொடைக்கானலுக்குப் போகமுடியும்!

உதகை, கொடைக்கானலுக்குச் செல்ல வேண்டுமானால் வரும் 7ஆம்தேதி முதல் ஜூன் கடைசிவரை இ பாஸ் அவசியமாகிறது. 

நேற்று ஒரு வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம் இதை இடைக்கால உத்தரவாகப் பிறப்பித்துள்ளது. நீதிபதிகள் பரத் சக்ரவர்த்தி, சதீஷ்குமார் ஆகியோர் அமர்வு இவ்வாறு உத்தரவிட்டு, வழக்கை ஜூலை 5ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தது. 

முன்னதாக, நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் வழக்கில் காணொலி மூலம் விசாரணையில் கலந்துகொண்டனர். 

அப்போது, நீலகிரிக்கு கோடைப் பருவத்தில், தினமும் கார், வேன் உட்பட மொத்தம் 20,011 வண்டிகளும், சுற்றுலாக் காலம் இல்லாதபோது 2,002 வண்டிகளும் வருகின்றன; விதிகளின்படியான தங்கும் இடங்களில் 20 ஆயிரம் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு 5,620 அறைகளும், தேவையான வண்டி நிறுத்தங்களும் இருக்கின்றன; மேலும், 12 இடங்களில் நிரந்தர வண்டி நிறுத்தும் வசதியும் உள்ளது என்று அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.  

கொடைக்கானல் குணா குகை
கொடைக்கானல் குணா குகை

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சுற்றுலா காலகட்டத்தில் அன்றாடம் 5,135 வண்டிகளும், மற்ற சமயங்களில் 2,100 வண்டிகளும் வருகின்றன என்றும் இங்கு 13,700 சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு 3,325 அறைகள் உள்ளன என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

கொடைக்கானலில் வண்டிகள் நிறுத்தும் வசதி இல்லாததுதான் முக்கிய பிரச்சினை; லேக் ஏரியா பகுதியில் ஒரு நிரந்தர வண்டி நிறுத்தமும், அப்சர்வேட்டரி, வட்டக்கானல் பகுதிகளில் நான்கு தற்காலிக வண்டி நிறுத்தும் இடங்களும் அமைக்கப்பட்டுள்ளன என்றும் மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. 

இதைப் பதிவுசெய்துகொண்ட நீதிபதிகள், ஐஐடி, ஐஐஎம் போன்ற நிறுவனங்கள் ஆய்வுசெய்து அறிக்கை தரவும், அதுவரை இடைக்காலமாக இ பாஸ் முறையைச் செயல்படுத்தவும் ஆணையிட்டனர். 

அப்போது, எந்த மாதிரியான வாகனங்களில் எத்தனை பேர் வருகின்றனர்; அவர்கள் எத்தனை நாள்கள் தங்கப் போகின்றனர்; எங்கு தங்க உள்ளனர் என்பன போன்ற விவரங்களையும் பெற்றுக்கொண்டு, சுற்றுலாத்தலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகளையும் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com