’தொண்டை நரம்பு தெறிக்கப் பேசிய விஜய்... இன்று மின்சார ஊழல்!’

Edappadi palaniswami
எடப்பாடி பழனிசாமி
Published on: 

தமிழகத்தில் எதிர்பாராவிதமாக 5 மாதங்களுக்கு முன் அமைந்த த.வெ.க. கூட்டணி அரசின், மின்சார வாரியம் வரலாற்றிலேயே இல்லாத வகையில் யூனிட் ஒன்றுக்கு சராசரியாக 35 ரூபாய் என்ற மிக, மிக அதிக விலையில் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது என்ற செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

”ஏற்கெனவே த.வெ.க. ஆட்சிக்கு வந்தவுடன் மின்சார வாரியம் கடன் சுமையால் தள்ளாடுகிறது என்றும், முந்தைய ஆட்சியில் மின் கட்டணத்தை நிர்ணயிப்பதில் குளறுபடிகள் உள்ளதாகக் கூறி, மின் கணக்கீட்டில் மாறுதல் செய்கிறோம் என்று ஏற்கனவே ரூ.1,500 மின் கட்டணம் செலுத்தி வந்த தமிழக மக்கள் தற்போது சுமார் ரூ.4,000 வரை கட்டுவதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இந்நிலையில், அதிக விலையில் மின் கொள்முதல் செய்ய போடப்பட்ட இந்த ஒப்பந்தம், தமிழ்நாடு மின்சார வாரியத்தை மேலும் கடன் சுமையில் மூழ்கடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தேர்தலுக்குமுன் தனது சொகுசுப் பேருந்தில் மேல்புறத்தில் இருந்து வசனம் பேசிய நடிகர் விஜய், எழுதிக் கொடுத்த வசனத்தை, அதாவது மின்சார வாரியத்தைப் பற்றி பேசும்போது, 'டெண்டர்' என்ற வார்த்தையை மிக அழகாக, தொண்டை நரம்பு தெறிக்குமளவிற்கு, ஏற்ற இறக்கத்துடன் பேசி கைத்தட்டலை பெற்று ஆட்சியைப் அமைத்த ஜோசப் விஜய், மின் பற்றாக்குறை அவசர நிலையை பயன்படுத்தி, ஏற்கனவே யுனிட் ஒன்றிற்கு ரூ.11-20 கொள்முதல் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, தமிழக வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு சராசரி யூனிட் ஒன்றுக்கு ரூ.35 வரை அதிக விலைக்கு 'மின் கொள்முதல் ஒப்பந்தம்' செய்வதில் மிகப் பெரிய 'மெகா ஊழல்' நடைபெற்றுள்ளதாக மக்கள் பேசுகின்றனர். த.வெ.க அரசு ஆட்சிக்கு வந்தவுடன் 'வெற்றி மெகா வசூல் திட்டத்தை' தொடங்கிவிட்டதாக மக்கள் பரவலாக பேசுகின்றனர்.” என்று அறிக்கை ஒன்றில் பழனிசாமி கூறியுள்ளார்.

மேலும், “ஏற்கெனவே பல லட்சம் ரூபாய் கோடி கடனில் மிதக்கும் தமிழக மின்சார வாரியத்தை மேலும் கடனில் மூழ்கடித்து கடைசியில் தனியாருக்குத் தாரை வார்க்க இந்த அரசு திட்டமிடுகிறதோ என்ற ஐயம் தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அநியாய விலைக்குத் தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கும் இந்த ஒப்பந்தத்திற்கு கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த ஒப்பந்தத்தை இந்த அரசு உடனடியாக கைவிட வேண்டும்.” என்றும் எடப்பாடி பழனிசாமி தன் அறிக்கையில் கூறியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com