இனியாவது சென்னையை முன்னிலைக்குக் கொண்டுவாருங்கள்!

Chennai
சென்னை
Published on

பின்தங்கிப் போய்விட்ட சென்னை மாநகராட்சியை இனியாவது முன்னிலைக்குக் கொண்டுவாருங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ இந்தியாவில் உள்ள நகரங்களின் தூய்மைப் பட்டியலில், அ.தி.மு.க. ஆட்சியில் 2020-ல் 45ஆவது இடத்திலும்; 2021 ல் 43-ஆவது இடத்திலும் சென்னை மாநகராட்சி இருந்தது. ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த உடன், இரண்டு முறை சொத்துவரி உயர்வு, குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல் கட்டண உயர்வு, குப்பை வரி உயர்வு என்று பல்வேறு சுமைகளை மக்கள் தலையில் சுமத்தினார்கள். ஆனால், மக்களிடம் வசூலிக்கும் கட்டணங்களுக்கு ஏற்ப தூய்மைப் பணிகளை மேற்கொள்ளாததன் காரணமாக இன்று சென்னை மாநகராட்சி அகில இந்திய அளவில் எடுக்கப்பட்ட சர்வேயின்படி, இந்த ஆண்டு 199-ஆவது இடத்தைப் பிடித்துள்ளதாக நாளிதழ்களிலும், ஊடகங்களிலும் செய்திகள் வந்துள்ளன.” என்று பழனிசாமி குறைகூறியுள்ளார்.

”ஏற்கெனவே மேயராக இருந்த ஸ்டாலின், மா. சுப்பிரமணியன், மாவட்ட அமைச்சர்கள், மாநகராட்சி மேயர், தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் என்று அனைவரும் இருக்கும் நிலையில், தொடர்ந்து சென்னை மாநகராட்சி அவல நிலையில் உள்ளதைக் கண்டு, மாநகராட்சி தேர்தலில் தி.மு.க.விற்கு ஓட்டு போட்டது குற்றமா என்று மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இனியாவது, சென்னை மாநகரில் தூய்மைப் பணிகள், சாலைப் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும், தினசரி குடிநீர் வழங்கவும், கழிவு நீர் அகற்றல் போன்ற அடிப்படை வசதிகளையும் ஸ்டாலினின் அரசு மேற்கொண்டு, மீண்டும் தூய்மை நகரங்கள் பட்டியலில் சென்னை மாநகராட்சியை முன்னிலைக்குக் கொண்டுவர வேண்டும்.” என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com