
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சூளகிரி வட்டத்திற்கு உட்பட்ட விவசாய விளைநிலங்களை அரசு திட்டத்திற்காக கையாகப்படுத்துவதை எதிர்த்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் முதலமைச்சர் ஸ்டாலினைச் சந்தித்து மனு கொடுக்கச்சென்றனர். அப்போது தி.மு.க. தலைமை அலுவலகமான அறிவாலயத்தின் வாசலிலேயே வைத்து அவர்களை காவல்துறை கைதுசெய்தது.
இதைக் குறிப்பிட்டு, அவர்களை அடைத்து வைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
”ஒரு முதலமைச்சராக மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்று பார்த்தால், மக்களிடம் மனு வாங்கக் கூட இன்றைய பொம்மை முதல்வருக்கு மனமில்லையா?” என்றும் அவர் கேட்டுள்ளார்.
”கடந்த 2021 தேர்தலுக்குமுன் மக்களிடம் மனு கேட்டு பெட்டியோடு அலைந்தவர், ஆட்சியில் இருக்கும் போது ஏழை விவசாயிகளின் மனுவைப் பெறக் கூட மனமின்றி இருப்பது ஸ்டாலினின் உண்மை முகத்தைத் தோலுரித்து காட்டுகிறது. கைது செய்யப்பட்ட விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்து, அவர்களுக்கு உரிய மரியாதை கொடுத்து, அவர்களின் மனுவைப் பெறவேண்டும்.” என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்திக் கூறியுள்ளார்.