தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் பகுதியைச் சேர்ந்த 26 மீனவர்களை மாலத்தீவு காவற்படையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் த.வெ.க. அரசு அலட்சிய போக்குடன் நடந்துகொள்வதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூக ஊடகப்பக்கத்தில் கூறியுள்ளதாவது:
"கடந்த 12.10.2026 அன்று மாலத்தீவு கடலோரக் காவற்படையினரால் தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் பகுதியைச் சேர்ந்த 26 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
இதுகுறித்து தமிழக அரசின் சார்பில், மூன்று நாட்களுக்கு பிறகே (15.10.2026), முதல்வர் ஒரு கடிதத்தை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு எழுதி இருக்கிறார். அந்த ஒரு கடிதத்தை தவிர, எந்த ஒரு அடிப்படைத் தகவல் பரிமாற்றமோ, அதற்குரிய துறை வாரியான செயல்பாடுகளையோ மீன்வளத் துறையும், ஆட்சியர் அலுவலகமும் இன்றுவரை எடுக்க வில்லை என செய்திகள் வருகின்றன.
மீனவர்களின் வாக்குகளின் மீது காட்டக்கூடிய முனைப்பை, அவர்களின் வாழ்வில் காட்டாத அக்கறையற்ற இந்த த.வெ.க. அரசுக்கு எனது கடுமையான கண்டனங்கள். அந்த பகுதியைச் சார்ந்த அரசு அலுவர்களோ, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரோ நேரில் சென்று மீனவர்களின் உறவினர்களைச் சந்திக்கவோ, பாதிக்கப்பட்ட மீனவர்கள் எங்கு, எப்படி இருக்கிறார்கள் என்ற தகவலைக் கூட பரிமாறவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்க ஒரு செய்தி.
இதுகுறித்து மக்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் சென்று கேட்டாலும், மாவட்ட மீன்வளத் துறை அலுவலகம் சென்று முறையிட்டாலும் எந்த பதிலையும் அளிக்காமல் அலட்சியப் போக்கில் செயல்படுகிறது இன்றைய த.வெ.க. அரசு.
இடைத்தேர்தலில் ஓடி ஓடி வாக்கு கேட்ட, மீன்வளத் துறை அமைச்சர், தன் பகுதியைச் சார்ந்தோர் பாதிக்கப்பட்டுள்ள இந்த சம்பவத்தின்போது காணாமல் போயுள்ளாரே? ஏன்? அங்கு ஏதும் இடைத்தேர்தல் வரப்போவதில்லை என்பதாலா ?
த.வெ.க. அரசிடம் காணாமல் போன மீனவர்களின் விவரங்கள் முதலில் இருக்கிறதா? 3 விசைப்படகுகளில், அதாவது அமல் சங்கர் படகில் 8 பேர், நிக்சன் படகில் 9 பேர், ஆரோன் படகில் 9 பேர் கடலுக்கு சென்றுள்ளனர் என்ற அடிப்படை விவரமாவது இந்த அரசுக்குத் தெரியுமா? காணாமல் போயுள்ள மீனவர்கள் யாரென்று தெரியவில்லை என்றால் சொல்லுங்கள்- என்னிடம் உள்ள விவரங்களை நான் அளிக்கிறேன்.
சுறா படத்தில் வருவது போல் கடலுக்கு நடுவே நீச்சல் அடித்து உங்களை யாரும் மீனவர்களை காப்பாற்றச் சொல்லவில்லை; குறைந்தபட்சமாக அரசால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யுங்கள்.
மீனவர்களை மீட்டு தாயகம் கொண்டுசேர்க்கும் முயற்சியில் மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படவும், அவர்களின் உறவினர்களை மாநில அரசின் சார்பில் அரசு அலுவலர்களை, சட்டமன்ற உறுப்பினரை, துறை அமைச்சரை அனுப்பி வைத்து அவர்களுக்கான உரிய தகவல் பரிமாற்றத்தை அளிக்குமாறும் இந்த அரசை வலியுறுத்துகிறேன்." என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.