
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் திருச்சியில் பிரச்சாரம் செய்தார். அப்போது, அவர் எடப்பாடி பழனிசாமி முழு சங்கியாகவே மாறிவிட்டார் என்று காட்டமாகக் கூறினார்.
கூட்டத்தில் அவர் பேசியது :
”தலைநகர் சென்னைக்கே சவால் விடும் வகையில் திருச்சி இன்றைக்குத் தரம் உயர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இதை என்னால் நெஞ்சை நிமிர்த்தி சொல்ல முடியும். மொத்தமாக டோட்டல் போட்டால், நான் பெருமையோடு சொல்கிறேன்... கடந்த 5 ஆண்டுகளில் இந்தத் திருச்சிக்காக 26 ஆயிரத்து 66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. அதனால்தான் உரிமையுடன் உங்களிடத்தில் உரிமையோடு வாக்கு கேட்க வந்திருக்கிறேன்.
மகளிர் உரிமைத் தொகையைத் தேர்தலை காரணம் காட்டித் தடுக்க நினைத்தார்கள். அதையும் முன்கூட்டியே தெரிந்து கொண்டு, மூன்று மாதங்களுக்கான தொகையையும், கோடை காலச் சிறப்பு நிதி 2 ஆயிரம் ரூபாயும் சேர்த்து, 5 ஆயிரம் ரூபாயை அட்வான்சாகக் கொடுத்தோம்.
தமிழ்நாட்டில் சாதிக் கலவரம் இல்லை, பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் போன்று மதக் கலவரங்கள் இல்லை. உத்தர பிரதேசம் போன்று கும்பல் வன்முறை இல்லை. மணிப்பூர் போன்று தொடர் வன்முறைகள் இல்லை.
இப்படி அனைத்தையும் உருவாக்க வேண்டும் என்று பா.ஜ.க. செய்த சூழ்ச்சிகளையும் நாம் முறியடித்திருக்கிறோம். அமைதியான சூழலும், திறமையான மனித வளமும், நம்முடைய ஆட்சியில் இருக்கும் காரணத்தினால்தான் இன்றைக்கு முதலீடுகளும் தமிழ்நாட்டில் வந்து கொண்டிருக்கிறது. இந்த வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்! " என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.
மு.க.ஸ்டாலினுக்குப் பதில் அளிக்கும்வகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சிவகங்கையில் மாலை கூட்டத்தில் பேசுகையில், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்த கருணாநிதி சங்கியா? கனிமொழி சங்கியா என அடுக்கடுக்காகக் கேள்விகளை எழுப்பினார்.