
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை கோபிச்செட்டிப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மக்களைச் சந்தித்தார். பிறகு டி.ஜி. புதூரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியது :
’’முன்னாள் எம்.எல்.ஏ. செங்கோட்டையனை யாரும் பார்க்கவே முடியாது. வீட்டு கேட்டைப் பூட்டி விடுவார், நாயை அவிழ்த்து விடுவார். இங்கு செங்கோட்டையன் 9 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தார். அவர் என்ன செய்தார் உங்களுக்கு..? நான் வந்துதான் உங்களுக்கு ரோடு போட்டுக் கொடுத்தேன். அவர் சட்டமன்றத்தில் தி.மு.க.வைb புகழ்ந்து பேசுவார். கருமம் பிடித்தவர், பணக்காரரைக் கண்டால் ஒரு மரியாதை, ஏழையைக் கண்டால் ஒரு மரியாதை. அப்படிப்பட்ட ஆள் தேவையா?
நாம் அவருக்கு எவ்வளவு மரியாதை கொடுத்து வைத்திருந்தோம். அவர் எப்போது பார்த்தாலும் போன் பண்ணி அம்மாவிடம் பேசுகிற மாதிரி பேசுகிறார். அம்மா ஏன் 2013-ல் அமைச்சர் பதவியைப் பிடுங்கினார்கள்..? எப்படி நடந்தது. உலகத்தில் உள்ள அதிசயம், நம் வீட்டில் இருக்கும் மனைவி, குழந்தைகள், நாம் பதவிக்கு வந்தால் சந்தோஷப்படுவார்கள். ஆனால் செங்கோட்டையன் வீட்டில், அவரது மனைவியும், மகனும் ஏதோ பிரச்சனை… அதை சொல்லக்கூடாது, அது தப்பான பிரச்சனை உங்களுக்கு நன்றாகத் தெரியும், அது சம்மந்தமாக புகார் சொன்னார்கள். அப்போது தலைமைச் செயலகத்தில் நான் கீழே இருந்தேன். அவர்கள் அம்மாவிடம் போய் இவரை பற்றி புகார் அளித்தார்கள், அம்மா அசந்துவிட்டார். குடும்பத்தில் இருக்கிறவர்களே இப்படி புகார் சொல்லும்போது, மக்களை எப்படி வாட்டி வதைப்பார் என்று அமைச்சர் பதவியிலிருந்து நீக்கிவிட்டார்கள்.
அம்மா மறைந்த பிறகு நான் முதலமைச்சரானேன். அதற்கு இவர் கண்ணீர் விட்டு அழுதார். அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டேன்.
என்னை முதலமைச்சராக எம்.எல்.ஏ.கள் தேர்ந்தெடுத்துவிட்டார்கள். ஆனால் இவர், அவருக்கு முதலமைச்சர் பதவி வந்தது என்று சொல்கிறார். உங்களை நம்பி ஒரு எம்எல்ஏ கூட வரவில்லையே..?
இவர் சம்பந்தமே இல்லாமல், பந்தியிலே கிழிந்த இலை போல் பேசுகிறார். பந்தியிலேயே இவரை அமர வைக்கவில்லை, என்னை முதலமைச்சராக்க பார்த்தார்கள், இபிஎஸ்ஸை ஆக்கிவிட்டார்கள் என்கிறார். எனக்கு எங்கள் எம்எல்ஏக்கள் எல்லாம் ஆதரவு கொடுத்தார்கள், நான் முதலமைச்சரானேன். உங்களுக்கு அந்த வாய்ப்பு கொடுக்கவில்லை. ஏன் என்றால் அம்மாவே ரிஜெக்ட் செய்த ஆள். உங்களை எப்படி நம்புவார்கள்….?
நான் பல தடவை பார்த்து இருக்கிறேன். போனில் பேசும்போது கூட அதெல்லாம் நடக்காது என்பார். எங்களுக்கே இப்படி என்றால் உங்களுக்கு எப்படி…?” என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
”செங்கோட்டையா... அரசியலாகப் பேசினால் பதில் கொடுக்கப்படும். இல்லாவிட்டால் உள்ளே இருக்கிறதையெல்லாம் எடுத்து டிவியில விட்ருவேன்.” என்று எச்சரிக்கையும் விடுத்தார்.
முன்னதாக, செங்கோட்டையன் நேற்றைய பிரச்சாரக் கூட்டத்தில் பேசியபோது பழனிசாமியைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.