விஜய்யின் 'ஆல் இஸ் வெல்'... எடப்பாடி பழனிசாமி எதிர் வாசகம்!

குழந்தைகளுக்கு முதல்வர் விஜய் வழங்கிய வாழ்த்து அட்டை
குழந்தைகளுக்கு முதல்வர் விஜய் வழங்கிய வாழ்த்து அட்டை
Published on: 

குழந்தைகள் தினத்தையொட்டி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சர் விஜய் இன்று கேக், வாழ்த்து அட்டைகளை வழங்கினார். அந்த அட்டைகளில், 'ஆல் இஸ் வெல்' என்று குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், த.வெ.க. ஆட்சியில் குற்றச்சம்பவங்களைப் பட்டியலிட்டு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவு :

" திருப்பூர் வீரபாண்டி அருகே 11 வயது சிறுமி கடத்தப்பட்டு , கடுமையான பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாகவும் , பெரியபாளையம் அருகே மாணவி மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் இவ்வருட குழந்தைகள் தினத்தை ஒட்டி வரும் செய்திகள் மக்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

மாற்றம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த இந்த டீம்ட் தாய்மாமாவின் ஆட்சியில், கடந்த 6 மாதங்களில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான குற்றங்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளதை இக்குற்றங்கள் வெட்டவெளிச்சமாக்குகின்றன.

காணாமல் போன செஞ்சி சிறுமியை இன்னும் “விஜய் மாமா”வின் அரசு கண்டுபிடிக்கவில்லை! ஆனால், இன்றைய தினம் பள்ளிக் குழந்தைகளுக்கு “கேக்” ஊட்டி விடப் போகிறாராம்.

கேக் கொடுக்கும் அட்டையில் "ஆல் இஸ் வெல்" என்று எழுதி இருக்கிறார்களாம். உங்கள் ஆட்சியில் “இஸ் ஆல் வெல்?”

குழந்தைகளுக்கு பள்ளி, வீடு, சாலை என்று எங்கேயாவது பாதுகாப்பு இருக்கிறதா? உங்கள் ஆட்சியில் கான்பிடண்டாக இருப்பது குற்றவாளிகள் மட்டும் தான்! இப்படி ஒரு திக்குத் தெரியாத, பாதுகாப்பற்ற ஆட்சியில் எப்படி பெண்கள், பெண் குழந்தைகள் நிம்மதியாக, கான்பிடண்டாக இருக்க முடியும்?

பெண்கள் மீது, பெண் குழந்தைகள் மீது கொஞ்சமாவது உண்மையிலேயே அக்கறை இருந்தால், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வழிவகைகளைப் பாருங்கள்.

​பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல், மாநிலத்தின் மூலைமுடுக்கெல்லாம் கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் நடப்பது அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.

* மதுரையில் பிரபல நகைக்கடை தனிஷ்க்-ல் 50 கோடி மதிப்புள்ள நகைகொள்ளை..

* காஞ்சிபுரத்தில் டாஸ்மாக் வசூல் பணம் 1.5 கோடி கொள்ளை..

* நெல்லையில் 70 வயது மூதாட்டியிடம் 13 பவுன் நகை கொள்ளையடித்த தவெக நிர்வாகி..

* விழுப்புரத்தில் பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து 16 சவரன் நகை கொள்ளை.

* திருவாரூரில் ஏழு பேராசிரியர்கள் வீட்டில் கொள்ளை..

* நாமக்கல் பள்ளிபாளையம் அருகே நள்ளிரவில் தெருவிளக்குகளை அணைத்து 7 வீடுகளில் கொள்ளை முயற்சி.

கான்பிடண்டாக இருங்க நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம் அப்படின்னு வசனம் பேசினீங்களே! இந்த வசனம் மக்களுக்கு சொன்னீங்களா? இல்ல குற்றவாளிகளுக்கு சொன்னீங்களா?

நீங்கள் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தும் அதேநேரத்தில் தான் இங்கே பல குற்றச்சம்பவங்கள் நடந்துள்ளன.. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மேடைக்கு மேடை மக்கள் பாதுகாப்பு பற்றி அடுக்குமொழியில் பேசிய ரீல் முதல்வர் அவர்களே! உங்கள் "ஆக்சன்" எல்லாம் சினிமா கேமரா முன்னால் மட்டும்தானா?

எனவே இனியாவது கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விடுபட்டு, உடனடியாக இந்த கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும்." என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram