"எடப்பாடியின் கார் டயர் கூட எங்கும் செல்லவில்லை" - ஜெயக்குமாருக்கு சேகர்பாபு பதிலடி!

Minister Sekar babu
அமைச்சர் சேகர்பாபு
Published on

“இரண்டு மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளத்தின்போது எடப்பாடி பழனிசாமியின் கார் டயர் கூட பாதிக்கப்பட்ட எந்த தெருவுக்கும் செல்லவில்லை.” என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

பெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் சூரைக்காற்றுடன் கனமழை கொட்டியது. சாலைகளில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. காற்றின் வேகத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், சில இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. அவைகள் உடனடியாக வெட்டி அகற்றப்பட்டன.

இந்தநிலையில், சுரங்கப்பாதைகள், மழைநீர் தேங்கிய பகுதிகள், குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த மழைநீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியும் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், பட்டாளத்தில் அமைச்சர் சேகர்பாபு மழை பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

“சென்னையில் ஒருசில இடங்களில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிக திறனுள்ள 600 எச்.பி. மின் மோட்டார்களை கொண்டு மழைநீர் வெளியேற்றப்படுகிறது. ஒரு சில தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணி நடக்கிறது. இன்னும் 2 மணி நேரத்தில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் வடிந்துவிடும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருபத்து நான்கு மணி நேரமும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். எங்களையும் செயல்பட வைக்கிறார். புயல் பாதிப்பை அரசு திறமையோடு எதிர்கொண்டது.

மழை நின்றவுடன் ரூ.19 கோடியில் பணிகள் தொடங்கப்படும். அடுத்த பருவமழைக்குள் தண்ணீர் தேங்காத சூழல் நிச்சயம் ஏற்படுத்தி தருவோம். அரசு நடவடிக்கைகளால் வெள்ள பாதிப்பை திறமையோடு எதிர்கொண்டதாக மக்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர். சென்னையில் இன்று 200 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.” என்றவரிடம், வடசென்னை பகுதியில் மழை வெள்ளம் தேங்குவதாகவும், முதலமைச்சரை வேண்டுமானால் அழைத்துக் கொண்டு போய் காட்டுவதாகவும் அதிமுகவின் ஜெயக்குமார் பேசியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “டெல்டா பகுதியில் ஏற்பட்ட பெரும் பாதிப்பின்போது எடப்பாடி பழனிசாமி வீட்டிலேயே அமர்ந்திருந்தார். இரண்டு மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளத்தின்போது எடப்பாடி பழனிசாமியின் கார் டயர் கூட பாதிக்கப்பட்ட எந்த தெருவுக்கும் செல்லவில்லை. எங்களின் முதல்வர் மழை வருவதற்கு முன்னரே தன்னுடைய காலை நிலத்தில் பதிக்கக் கூடிய முதல்வர். ஜெயக்குமார் எங்கள் முதல்வரை அழைப்பதற்கு எந்த அருகதையும் இல்லை.” என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com