அரசு மருத்துவர் அஞ்சுதா
அரசு மருத்துவர் அஞ்சுதா

பிரசவத்தில் அரசு மருத்துவர் மரணம்- முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கருத்து!

இரட்டைக் குழந்தைகளைப் பெற்றபின் மரணமடைந்த புதுக்கோட்டை அரசு மருத்துவர் அஞ்சுதாவின் இறப்புக்கு சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில், “தன் பிஞ்சுக் குழந்தைகளின் முகம்கூட காணாமல் உயிரிழந்த மருத்துவர் அஞ்சுதா-வின் மறைவு பெருந்துயரம்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராசு - தமிழரசி தம்பதியினரின் அன்பு மகளும், புதுக்கோட்டை இராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையின் பயிற்சி மருத்துவருமான Dr. R.அஞ்சுதா M.S.,(OG) -ன் அகால மரணம் மிகுந்த வேதனையளிக்கிறது.

பிரசவ வலி ஏற்பட்ட உடனே சிறிதும் தாமதமின்றி மருத்துவமனைக்கு விரைந்திருக்க வேண்டியவர், கால தாமதமாய் தான் பணியாற்றிய இராணியார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரட்டைக் குழந்தைகள் ஈன்றெடுத்து உயிரிழந்திருக்கிறார்.

மகப்பேறு காலத்தில் நேரத்தின் அருமையை நன்கறிந்து எத்தனையோ பிரசவங்களை செய்திருக்க வேண்டிய மகப்பேறு மருத்துவரே, கால தாமதத்தால் உயிர் பிரிந்தது சொல்லிலடங்கா துயரம்.

மருத்துவர் அஞ்சுதாவை இழந்து வாடும் அவரது கணவர் பல் மருத்துவர் கார்த்திக் மற்றும் செங்கல் இறக்கும் வேலையும், சித்தாள் வேலை செய்தும் மகளை படிக்க வைத்த பாசமிகு பெற்றோருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று விஜயபாஸ்கர் கூறியுள்ளார். 

குறிப்பிட்ட மருத்துவர் விடுப்பு எடுத்தால் சம்பள வரன்முறை தாமதமாகும் என்பதால், தேவையான விடுப்பு எடுக்காமல் பணியாற்றி வந்தார் என்றும் செவிலியர்களும் இப்படி பிரசவம் நெருங்கும்வரை விடுப்பு எடுக்காமல் சமாளிக்க முயல்வதாகவும் இவ்விரண்டு பிரிவினரின் ஊதிய வரன்முறையை உரிய காலத்தில் செய்தால் இவர்கள் பிரசவத்துக்குத் தேவையான விடுப்பை முன்கூட்டியே எடுக்கமுடியும்; இதுபோன்ற அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட முடியும் என்று மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com