ஐஏஎஸ் அதிகாரி இராதாகிருஷ்ணன் பெயரில் போலி வாட்சாப்
ஐஏஎஸ் அதிகாரி இராதாகிருஷ்ணன் பெயரில் போலி வாட்சாப்

வாட்சாப் மோசடி முயற்சி - நடந்தது என்ன?- சென்னை ஆணையர் விளக்கம்!

கடந்த ஆண்டு வரிசையாக மாவட்ட ஆட்சியர்களின் பெயர்களில் போலியான சமூக ஊடகப் பக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அதேபோல மீண்டும் இப்போது சிலர் கைவரிசை காட்டத் தொடங்கியுள்ளனர். சென்னை மாநகராட்சி ஆணையர் இராதாகிருஷ்ணனின் பெயரால் மோசடி வாட்சாப் கணக்கு ஒன்று தொடங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

அந்த வாட்சாப் கணக்கில் இராதாகிருஷ்ணனின் படமும் பெயரும் ஏன் பதவியும்கூட தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அவருடைய தொலைபேசி எண் மட்டும் போலி. இந்தக் கணக்கின் மூலம் சமூக ஊடக மோசடியாளர்கள் செய்வதைப்போல, ’ஆபத்தில் இருக்கிறேன்; அவசரமாகப் பணம் அனுப்புங்கள்’ என பலரிடமும் மோசடிசெய்ய முயன்றிருக்கிறார்கள். 

இதைப் பற்றி அவரை சமூக ஊடகத்தில் பின்தொடர்வோர் மத்தியில் அதிர்ச்சியும் குழப்பமும் உண்டாது. இந்நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் சிலர், ஆணையர் இராதாகிருஷ்ணனிடம் இத்தகவலைத் தெரிவித்துள்ளனர். 

உடனே, அவர் அதைப் பற்றி முகநூல், இன்ஸ்டாவில், “குறிப்பிட்ட அந்தத் தொலைபேசி எண் என்னுடையது இல்லை. பணம் பறிப்பதற் காக மோசடியாக யாரோ இப்படிச் செய்திருக்கிறார்கள். காவல்துறையிடம் நான் புகார் அளித்துள்ளேன். அந்த எண்ணை பிளாக் செய்து, ரிப்போர்ட் அடியுங்கள்.” என்று பதிவிட்டார். 

அந்திமழை சார்பில் அவரிடம் பேசினோம். “மோசடி நபர் அண்மையாக நான் என் சமூக ஊடகப் பக்கத்தில் பதிந்திருந்த நீலநிறச் சட்டையுள்ள என் படத்தை அடையாளமாக வைத்திருந்தான். பிறகு என் வாட்சாப்பில் நான் வைத்திருந்த குடும்பப் படத்தை அடையாளப் படமாக மாற்றினான். 

மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை தலைமைப்பொறியாளர் சக்தி மணிகண்டன் முதலில் எனக்கு இப்படி நடப்பதாகத் தெரிவித்தார். பிறகு மண்டல துணை ஆணையர் அமித்தும் கூறினார். அடுத்து, 13ஆவது மண்டல அதிகாரி சீனிவாசனும் தகவல் தெரிவித்தார். உடனே, போலீசில் புகார் அளித்துவிட்டு, அந்த நபருக்கும் மோசடிசெய்வதைக் கண்டித்து தகவல் அனுப்பிவிட்டேன். ட்ரூ காலரில் பெயரைப் பார்த்தால் ஏதோ நாயக் என வருகிறது. பேச அழைத்தால் இந்தியில் தகவல் வருகிறது. தெளிவுபடுத்துவதற்காக சமூக ஊடகப் பக்கங்களில் விளக்கம் வெளியிட்டேன்.” என்று விவரித்தார், டாக்டர் இராதாகிருஷ்ணன்.  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com