ஒகேனக்கல் அருகே வனப்பகுதியிலிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் காவலர்கள்
ஒகேனக்கல் அருகே வனப்பகுதியிலிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் காவலர்கள்

ஒகேனக்கல் ஆக்கிரமிப்புகள் அகற்றிய விவகாரம்; தருமபுரி வனத்துறை விளக்கம்!

ஒகேனக்கல் அருகே வனப்பகுதியிலிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றியது தொடர்பாக தருமபுரி மாவட்ட வனத்துறை விளக்கம் அளித்துள்ளது.

ஒகேனக்கல் அருகே பென்னாகரம் வனப் பகுதிக்கு உட்பட்ட பேவனூா் காப்புக்காடு பகுதியில் காவிரி கரையோரத்தில் வேப்பமரத்துகொம்பு கிராமம் உள்ளது. அக்கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அவா்களை அங்கிருந்து வெளியேறுமாறு வனத் துறையினர் பலமுறை அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 9ஆம் தேதி காலை பென்னாகரம் வனச்சரக அலுவலர் செந்தில்குமாா் தலைமையிலான வனத் துறையினா், ஒகேனக்கல் காவல் துறையினா் நேரடியாக வேப்பமரத்துகொம்பு கிராமத்திற்குச் சென்று கிருஷ்ணன் என்பவரின் வீட்டை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். கிராம மக்கள் அதைத் தடுக்க முயற்சித்த போது வனத் துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

தற்போது இது தொடர்பாக தருமபுரி மாவட்ட வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. பென்னாகரம் வனச்சரகம் பேவனூர் காப்புக்காட்டில் மணல் திட்டு பகுதியில் கிருஷ்ணன் என்பவர் அத்துமீறி நுழைந்து தகர கொட்டகை அமைத்துள்ளார். உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படியும் தமிழ்நாடு வனச்சட்டப்படியும் தகர கொட்டகை, சிறிய ஓட்டு வீடு ஆகிய ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

வனப்பகுதியை ஆக்கிரமிப்பு செய்த கிருஷ்ணன் என்பவர் பூர்வகுடி அல்ல; கிருஷ்ணனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பென்னாகரம் பகுதியில் விளை நிலங்களும், வீட்டு மனையும் உள்ளன என்று வனத்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com