பிரபல திரைப்பட இயக்குநர் வி.சேகர் காலமானார்!

இயக்குநர் வி.சேகர்
இயக்குநர் வி.சேகர்
Published on

திரைப்பட இயக்குநர் வி.சேகர் உடல்நல பாதிப்பால் காலமானார். அவருக்கு வயது 73.

கடந்த பத்து நாட்களுக்கு மேலாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று (நவ.14) மாலை காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

‘நீங்களும் ஹீரோ தான்’ படத்தின் மூலம் 1990இல் இயக்குநராக அறிமுகமான வி.சேகர், ‘பொண்டாட்டி சொன்னா கேட்கணும்’, ‘விரலுக்கேத்த வீக்கம்’, ‘வரவு எட்டணா செலவு பத்தணா’ உள்ளிட்ட குடும்ப படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை ஈர்த்தவர். முதன்முதலாக வடிவேலுவையும் விவேக்கையும் ஒரே படத்தில் நடிக்க வைத்த பெருமைக்குரியவர்.

திருவண்ணாமலை அருகே உள்ள நெய்வாநத்தம் கிராமத்தில் எஸ்.வெங்கடேசன் - பட்டம்மாள் தம்பதிக்கு பிறந்த இவர், திருவண்ணாமலையில் பியூசி படித்தார். ஏவிஎம் ஸ்டுடியோவில் கருப்பு வெள்ளை 16 எம்.எம். லேப்பில் உதவியாளராக 19 வயதில் வேலைக்கு சேர்ந்தார். பிறகு, மாநகராட்சி சுகாதார துறையில் 15 ஆண்டுகள் பணிபுரிந்தார். வேலை செய்துகொண்டே மாலை நேரத்தில் நந்தனம் கலை கல்லூரியில் பி.ஏ., பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ. படிப்பை முடித்தார்.

பின்னர், பகுதி நேரமாக எடிட்டர் லெனினிடம் உதவியாளராக சேர்ந்தவர், இயக்குநர் கே.பாக்யராஜின் உதவியாளர் கோவிந்தராஜ் இயக்கிய ‘கண்ண தொறக்கனும்சாமி’ படத்தில் உதவி இயக்குனர் ஆனார். பிறகு கே.பாக்யராஜின் உதவியாளராக இரண்டு ஆண்டுகள் கதை இலாகாவில் பணியாற்றினார்.

வி.சேகர் இயக்கிய முதல் படம் ‘நீங்களும் ஹீரோதான்’. 1990இல் வெளியான இப்படம் வெற்றி அடையாததால், மீண்டும் சுகாதாரப் பணிக்கு திரும்பினார். அதன்பின் நிழல்கள் ரவி, கவுண்டமணி, செந்தில் ஆகியோருடன் இணைந்து ‘நான் புடிச்ச மாப்பிள்ளை’ படத்தை இயக்கினார். அந்தப் படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

அதன் பிறகு ‘பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்’, ‘ஒண்ணா இருக்க கத்துக்கணும்’, ‘பொறந்த வீடா புகுந்த வீடா’, ‘பார்வதி என்னை பாரடி’, ‘வரவு எட்டணா செலவு பத்தணா’, ‘நான் பெத்த மகனே’, ‘காலம் மாறிப் போச்சு’, ‘பொங்கலோ பொங்கல்’, ‘விரலுக்கு ஏத்த வீக்கம்’ உள்ளிட்ட படங்களை இயக்கினார்.

தனது மாமா மகள் தமிழ்செல்வியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மலர்க்கொடி என்கிற மகளும், காரல் மார்க்ஸ் என்கிற மகனும் உள்ளனர்.

ஏழை, நடுத்தர வர்க்கத்தினரின் குடும்பப் பிரச்சினைகளை மையபடுத்தும் இவரது படைப்புகள், சமூகத்தில் பெண்களின் உரிமையையும் உரக்கப் பேசுபவை.

logo
Andhimazhai
www.andhimazhai.com