மக்காச்சோளம் விலை ரூ.800 வீழ்ச்சி அடைந்துள்ளது; அரசு தலையிட விவசாயிகள் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமி.நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை :
” தமிழ்நாட்டில் 17-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பரவலாக விவசாயிகள் மக்காச்சோளச் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நடப்பாண்டு மக்காச்சோளம் விலை வீழ்ச்சி அடைந்து விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர். ஒன்றிய அரசு ஒரு குவிண்டால் மக்காச்சோளம் ரூ.2435 குறைந்தபட்ச ஆதார விலையாக அறிவித்துள்ளது. ஆனால் விவசாயிகளுக்கு அரசு அறிவித்த விலை கிடைப்பதில்லை. தற்போது தமிழ்நாட்டில் ஒரு குவிண்டால் மக்காச்சோளம் ரூ.1600 முதல் ரூ.1800வரைதான் தனியார் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இடைத்தரகர்களை வைத்து பல நிறுவனங்கள் சிண்டிகேட் அமைத்து ஒன்றிய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதார விலையைவிட ரூ.835 குறைவாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்கின்றனர்.
தமிழ்நாட்டில் இரண்டு பருவங்களிலும் சேர்த்து 30 லட்சம் டன் மக்கா சோளம் உற்பத்தி செய்யப்படுகிறது. மக்காச்சோளம் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் சுமார் இரண்டாயிரம் கோடிக்கும் மேல் இழக்கின்றனர். தமிழ்நாட்டில் விளைகிற மக்காச்சோளத்தில் 65 சதவீதத்தை கோழி, மாட்டுத்தீவனங்கள் தயாரிப்பதற்காக நிறுவனங்கள் இடைத்தரகர்களை வைத்து விவசாயிகளிடம் வாங்குகின்றனர். தமிழ்நாட்டின் தேவையைவிட குறைவான உற்பத்தி இருக்கிற நிலையிலும் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்துக்கொண்டு விவசாயிகளிடம் அடிமாட்டு விலைக்கு மக்காளக்சோளத்தைக் கொள்முதல் செய்துவருகின்றனர்.
எனவே, விவசாயிகள் உற்பத்தி செய்யும் மக்காசோளத்தை அரசே கொள்முதல் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசு அறிவிக்கும் ஆதார விலை அனைத்துப் பொருட்களுக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் கிடைப்பதை அரசு உறுதிப்படுத்திட வேண்டும். மக்காச்சோளத்திற்கு அரசு அறிவித்த ஆதார விலையில் கொள்முதல் செய்வதற்கு மாநில அரசு முத்தரப்பு கூட்டம் நடத்தி உறுதிப்படுத்திட வேண்டும்.” என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.