குறுவை சிறப்புத் திட்டம் சரிதான்... இழப்பீடும் வேணும்- விவசாயிகள் சங்கம்

காவிரி ஆறு
காவிரி ஆறு
Published on

காவிரிப் படுகை மாவட்டங்கள், மற்ற மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடிக்கான சிறப்புத்தொகுப்புத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளதற்கு விவசாயிகள் அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.  

சி.பி.எம். கட்சிசார்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமி.நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை: 

”நடப்பாண்டு குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை இன்று (ஜூன் 12 ) திறந்திருக்க வேண்டும். மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத நிலையில், தென்மேற்கு பருவமழையும் காலத்தோடு துவங்காத நிலையில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் 1000 கன அடிக்குள் உள்ளதால் ஆற்றுபாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் குறுவை சாகுபடியை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆழ்குழாய் பாசனத்தை நம்பி குறுவை சாகுபடி மேற்கொள்ளவுள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் குறுவை சிறப்புத் தொகுப்புத்திட்டம் 2026-யை அறிவித்துள்ளதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வரவேற்கிறோம்.

இந்த தொகுப்பு திட்டத்தின் மூலம் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு 77.50 கோடியும், டெல்டா அல்லாத மாவட்டங்களுக்கு 57.33 கோடியும், மொத்தமாக 134.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, இயந்திர நடவு, நேரடி நெல் விதைப்பதற்கு ஊக்கத்தொகை, உயிர் உரங்கள், நுன்னுட்ட உரங்கள், விதை நெல் மானியம் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது நல்லஅம்சமாக இருந்தாலும், ஆற்றுப்பாசனத்தை மட்டுமே நம்பியுள்ள விவசாயிகள் குறிப்பாக ஏழை, சிறு, குறு விவசாயிகள் குறுவை சாகுபடியை இழந்து நிற்கும் நிலையில் இவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்குவது குறித்து மாநில அரசு பரிசீலனை செய்து அறிவிப்பு வெளியிட வேண்டும்.” என்று சாமி.நடராஜன் கூறியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com