காவிரி டெல்டா தொழில்கள் - வெள்ளை அறிக்கை வேண்டும்!
காவிரி டெல்டாவில் தொடங்கவுள்ள தொழில்கள் குறித்து மாநில அரசு உடன் வெளிப்படைத் தன்மையுடன் திட்ட அறிக்கையை வெளியிட வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமிநடராஜன் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கை:
“ காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை வழங்குவதற்காக தமிழக சட்டமன்றத்தில் ஏற்கனவே திருச்சி முதல் நாகை வரை வேளாண் தொழில்தட பெரும் வழிசாலையாக அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்டுள்ள இந்த பகுதிகளில் விவசாயம் சார்ந்த தொழில்கள் துவங்கப்படும் என அறிவித்தனர். தற்போது அதற்காக தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, நன்னிலம், திருத்துறைப்பூண்டி பகுதிகளில் சிப்காட் மூலம் நிலம் கையகப்படுத்துவதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்படவுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, அதற்கான சட்டமும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் புதியதாக தொழில்கள் துவங்க நிலம் கையகப்படுத்துவதற்கான செய்திகள் வெளிவந்து கொண்டுள்ளது. எவ்வளவு நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது, எந்த வகையான தொழில்கள் தொடங்கப்படவுள்ளன என்கிற விவரங்களை மாநில அரசு முதலில் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
மேலும், காவிரி டெல்டா மாவட்டங்களில் ஏற்கனவே நஞ்சை நிலங்கள் சாகுபடி பரப்பு குறைந்துள்ள நிலையில் விவசாயம் சார்ந்த தொழில்கள் மட்டுமே தொடங்கப்பட வேண்டும், அதற்கும் நஞ்சை நிலத்தைக் கையகப்படுத்திட கூடாது.
மேலும் வேளாண் தொழில்தடத்தில் தொழில்கள் அமையவுள்ள இடங்களில் முதலில் விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்திட வேண்டும்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிடுவது எவ்வளவு முக்கியமோ, அதைவிட காவிரி டெல்டா விவசாயத்தைப் பாதுகாப்பது மிக முக்கியம் என்பதை அரசு கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.” என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.