
இறக்குமதி பருத்திக்கு வரியை இரத்து செய்யக் கோரி முதல்வர் விஜய் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொதுச்செயலாளர் சாமி நடராசன் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கை:
”இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு விதிக்கப்படுகிற 11 சதவிகித இறக்குமதி வரியை முற்றாக இரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். இதனால் பருத்தி விலை வீழ்ச்சி அடைந்து பருத்தி விவசாயிகள் கடுமையாக பாதிப்பார்கள் பருத்தி விவசாயிகளுக்கு எதிராக கடிதத்தை முதல்வர் விஜய் பிரதமருக்கு எழுதலாமா ?
கடந்த ஆண்டு செப்டம்பர் 30, 2025 வரை பருத்தி இறக்குமதிக்கான 11 சதவிகித வரியை ஒன்றிய பா.ஜ.க. அரசு இரத்து செய்தது, பின்னர் டிசம்பர் 31, 2025 வரை கால நீட்டிப்பு செய்தனர். ஒன்றிய அரசு பருத்திக்கான இறக்குமதி வரி இரத்து செய்ததை அகில இந்திய விவசாயிகள் சங்கம், மற்ற விவசாய அமைப்புகளும் கண்டித்தன. ஒன்றிய பா.ஜ.க. அரசு தனது முடிவைக் கைவிட வேண்டும். இறக்குமதி பருத்திக்கு வரி விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்.
இறக்குமதி பருத்திக்கு வரியை இரத்து செய்த காலத்தில் அமெரிக்கா உட்பட்ட வெளிநாடுகளிலிருந்து 4.13 மில்லியன் டன் பருத்தியை இந்தியா இறக்குமதி செய்தது. இதனால் உள்நாட்டில் ஒரு குவிண்டால் பருத்திக்கு 1200 ரூபாய்வரை விலை வீழ்ச்சி அடைந்து இந்திய பருத்தி விவசாயிகள் பல்லாயிரம் கோடி ரூபாயை இழந்தார்கள். மகாராஷ்டிரா மாநிலத்தில் பருத்தி சாகுபடி அதிக அளவில் நடைபெறும் மாவட்டங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள். தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு நிரனயித்த குறைந்தபட்ச ஆதார விலை ஒரு குவிண்டாலுக்கு ரூ.7,120 விலை கிடைக்காமல் ஒரு குவிண்டால் பருத்திக்கு 5800-ல் இருந்து 6200 ரூபாய் மட்டுமே தமிழக விவசாயிகளுக்கு விலையாகக் கிடைத்தது. ஒன்றிய அரசின் குறைந்தபட்ச ஆதார விலையை விட குறைவான விலைக்கு விற்று விவசாயிகள் தமிழகத்தில் நட்டம் அடைந்தார்கள்.
இந்நிலையில், கடந்த ஆண்டு அனுபவம் இப்படி இருக்கும்போது பருத்தி இறக்குமதி வரியை 2026 ஆண்டிலும் இரத்து செய்யக் கோரி முதலமைச்சர் விஜய் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு கடிதம் எழுதியது, நாடு முழுவதும் இருக்கிற பருத்தி விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிற செயலாகும். முதலமைச்சர் விஜய் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தைத் திரும்பப் பெற வேண்டும்.” என்று சாமி நடராஜன் கூறியுள்ளார்.