தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 38 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்வு இன்றுமுதல் அமலுக்கு வந்தது.
மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் 1 லட்சத்து 44 ஆயிரத்து 634 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் உள்ள 892 சுங்கச்சாவடிகளில் 675 சுங்கச்சாவடிகள் பொது நிதியளிப்பு பிரிவிலும், 180 சுங்கச்சாவடிகள் அரசின் சலுகை பெற்றவையாகவும் செயல்படுகின்றன.
சுங்கச்சாவடிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்து கட்டணம் வசூலித்து வருகிறது. அந்தவகையில், தமிழகத்தில் 6 ஆயிரத்து 606 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 78 சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன. இதில் ஆண்டொன்றுக்கு 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி ஏப்ரல், செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி விழுப்புரம், அரியலூர், புதுக்கோட்டை உட்பட பல இடங்களில் 40 சுங்கச்சாவடிகளில், 5 முதல் 10 சதவீதம் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டது.
இந்தநிலையில், விழுப்புரம், திருச்சி, மதுரை, நெல்லை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் குறிப்பாக விக்கிரவாண்டி, சமயபுரம், ஓமலூர் உள்ளிட்ட 38 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் நள்ளிரவு முதல் 5 முதல் 7 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு அமலுக்கு வந்தது. இந்த கட்டண உயர்வால் வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.