இரண்டாவதும் பெண் குழந்தையா...பெண் சிசுவைக் கொன்ற பாட்டி!

female infanticide
பெண் சிசு கொலை
Published on

பெண் சிசு கொலையில் 47 வயது பெண் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த செட்டிமாங்குறிச்சியைச் சேர்ந்தவர் தங்கமணி. அண்மையில், இவருடைய மகளான பிரியதர்ஷினிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் பவானியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிசேரியன் மூலம் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஏற்கெனவே செல்வக்குமார்-பிரியதர்ஷினி தம்பதிக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது.

குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே, பிரியதர்ஷினியின் கணவர் செல்வகுமாருக்கு உடல்நிலை குன்றியது. இதனால், அதே மருத்துவமனையில் செல்வக்குமார் அனுமதிக்கப்பட்டார்.

புதிதாக தன் மகளுக்கு பிறந்த குழந்தையைப் பார்த்துகொள்ள பிரியதர்ஷினியின் தாய் தங்கமணி, பிரியதர்ஷினியின் தம்பி பூபதி ஆகியோர் மருத்துவமனையில் தங்கினர்.

இந்நிலையில், குழந்தை பிறந்த நாள் அன்று இரவு 8.15 மணிக்கு, குழந்தை பேச்சுமூச்சு இன்றி இருந்ததை மருத்துவமனையில் உள்ள செவிலியர் கண்டார். பின்னர், குழந்தையை பரிசோதித்தபோது குழந்தையின் கழுத்து, மூக்கு, கன்னம் ஆகியவற்றில் காயம், ரத்தக்கறைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக குழந்தையை அருகில் உள்ள தனியார் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு இருந்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினர்.

இதனால், சந்தேகமடைந்த தனியார் மருத்துவமனை நிர்வாகம், பவானி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும், உடற்கூறு ஆய்விற்காக குழந்தையின் உடல் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில், தன் மகளுக்கு இரண்டாவதும் பெண் குழந்தை என்பதால் அந்த குழந்தையின் பாட்டியே, பேத்தியை கொன்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com