அமைச்சர் தங்கம் தென்னரசு
அமைச்சர் தங்கம் தென்னரசு

மகளிர் தொகை- வங்கிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை

மகளிர் உரிமைத் தொகைத் திட்டப் பயனாளிகளிடம் சில வங்கிகள் பணத்தைப் பறித்துக்கொண்டுள்ள நிலையில், குறிப்பிட்ட வங்கிகளுக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் 1.065 கோடி பெண்களுக்கு, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் முதல் நாளன்றே ஒரு கோடிக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது; இது குறித்து  நாடே பாராட்டுகிறது; ஆங்காங்கே சில குறைகள் அரசின் கவனத்திற்கு வந்துள்ளன என்று இன்றைய அறிக்கை ஒன்றில் அமைச்சர் தென்னரசு தெரிவித்துள்ளார்.

”மகளிரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட உரிமைத் தொகையை வங்கிக்கான சேவைக் கட்டணம், ஏற்கனவே வாங்கிய கடன் ஆகியவற்றுக்கு, சில வங்கிகள் நேர் செய்துகொள்வதாக புகார்கள் வரப்பெற்றுள்ளன. இது மிகவும் வருந்தத்தக்க நிகழ்வாகும்.” என்றும்,

“இதுகுறித்து மாநில வங்கிகள் குழுமத்தின் கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்படும் உரிமைத் தொகையை வங்கிகள் பிடித்தம் செய்யக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் சில வங்கிகளில் இந்த அறிவுறுத்தல் பின்பற்றப்படவில்லை என்பது ஏற்கத்தக்கதல்ல.” என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும், ”தமிழ்நாடு அரசு வழங்கும் மகளிர் உரிமைத் தொகையை வங்கிகள் தங்களது நிர்வாக செலவினங்களுக்கு நேர் செய்யக்கூடாது என்று மாநில அரசுக்கும் வங்கிகளுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.” என்று தெரிவித்துள்ள நிதியமைச்சர், ஒப்பந்தங்களை மீறும் வங்கிகளின் வங்கிகளின் பரிவர்த்தனைகள் வேறு வங்கிகளுக்கு மாற்றப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

தமிழ்நாடு அரசு மகளிரின் நல்வாழ்வுக்காக வழங்கும் மகளிர் உரிமைத் தொகையை, வங்கிகள் தங்களது நிர்வாக காரணங்களுக்காக பிடித்தம் செய்யக் கூடாது என்பது குறித்து ஒன்றிய நிதி அமைச்சருக்கு கடிதம் எழுதப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மகளிர் உரிமைத் தொகையில் பிடித்தம் செய்யப்பட்டிருந்தால் அது குறித்து புகார் அளிப்பதற்கு முதல்வரின் முகவரி உதவி மைய தொலைபேசி எண் 1100- ஐ அழைத்து புகார் அளிக்கலாம். மகளிர் அளிக்கப்படும் இப்புகார்கள் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com