முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மீனவர் பிரச்னை: மத்திய அரசுக்கு முதல்வர் வலியுறுத்தல்!

இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக கடலோரப்பகுதிகளில் இருந்து மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்யும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதைக் கண்டித்து காலவரையறையற்ற போராட்டம் நடத்த மீனவர் சங்கங்கள் சார்பில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்திருந்தனர்.

அதன்படி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் மீனவர்களுக்கு சிறைத்தண்டனை வழங்குவதைக் கண்டித்தும், மீனவர்களின் படகுகள் நாட்டுடைமையாக்கப்படுவதைக் கண்டித்தும் 700க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கியுள்ளனர். மீனவர்கள் தங்களது படகுகளில் கருப்புக் கொடி கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

மேலும், ராமேஸ்வரத்தில் பிப்ரவரி 20 ஆம் தேதியில் இருந்து மீனவர்கள் நடைப்பயணமாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று முற்றுகையிடப் போவதாகவும் தெரிவித்துள்ளனர். அதே சமயம் கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்கவும் மீனவர்கள் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மீனவர்களை விடுவிக்க பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

“தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருவது கவலை அளிக்கிறது. கடந்த இரண்டு மாதங்களில், 69 மீனவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கைதுகள் அதிகரித்துள்ளன. மேலும், கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால், மூன்று மீனவர்கள் மீது அநியாயமாக முத்திரை குத்தப்பட்டு, அவர்கள் நீண்டகாலமாக காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலை நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்துவது மட்டுமன்றி அவர்களின் படகுகள் இலங்கை அரசால் தேசியமயமாக்கப்பட்டதால் அவர்கள் கடின உழைப்பில் சம்பாதித்த சேமிப்பையும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரதமரிடம் இராஜதந்திர ரீதியில் தலையீடு செய்ய வேண்டும் என்று தமிழக மக்கள் சார்பாக நான் வலியுறுத்துகிறேன். மேலும், பிரதமர் நரேந்திர மோடியும் மற்றும் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் நடவடிக்கை எடுத்து நமது மீனவர்களை திருப்பி அனுப்புவதையும் அவர்களின் படகுகளை விடுவிப்பதையும் உறுதி செய்ய வேண்டும். இந்த விஷயத்தை முதன்மைப்படுத்தி, நமது மீனவர்களின் நலன்களைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கை எடுப்பது முக்கியம். ஏனென்றால் அவர்கள் தமிழர்கள் மட்டுமல்ல, பெருமைமிக்க இந்தியர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com