கடந்த ஆண்டைவிட தமிழகத்தில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
நடப்பு ஆண்டில் தமிழகத்தில் பாதிப்புகள் அதிகமாக இருப்பதை பொதுசுகாதாரத் துறையின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி வரை, தமிழகத்தில் 13,573 பேர் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஜூலையில் 1,880 பேர் பாதிப்படைந்திருந்த நிலையில், நடப்பு ஆண்டு ஜூலை மாதத்தில் 2,339 பேர் பாதிப்படைந்துள்ளனர்.
அதேபோல, கடந்த ஆகஸ்ட்டில் 1,832ஆக இருந்த பாதிப்பு எண்ணிக்கை, நடப்பு ஆண்டு ஆகஸ்ட்டில் 3,315ஆக உள்ளது.
இந்த பாதிப்பு எண்ணிக்கை, குறிப்பாக சென்னையில்தான் அதிகமாக உள்ளது. தமிழகத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கையான 13,573 டெங்கு பாதிப்பில் 2,584 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.
மேலும், ஆண்டுவாரியான பாதிப்பில் கடந்த ஆண்டு 25,533ஆக இருந்த நிலையில், தற்போது ஆகஸ்ட் மாதத்திற்குள் 13,573-ஐ எட்டியுள்ளது. மழைக்காலம் தொடங்கியுள்ளதால் மேலும் பாதிப்புகள் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல, கடந்த ஆண்டு 1,288ஆக இருந்த பன்றிக்காய்ச்சல், நடப்பு ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் 1,791ஆகப் பதிவாகியுள்ளது.
இதனால், பொதுமக்கள் மிகுந்த கவனத்தோடு சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.