“போலி கையெழுத்து...” - ராமதாஸ் மீண்டும் புகார்!

மருத்துவர் ராமதாஸ்
மருத்துவர் ராமதாஸ்
Published on

தனது கையெழுத்தை அன்புமணி தரப்பினர் போலியாக போட்டிருக்கிறார்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், தலைவர் அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், பாமக மற்றும் மாம்பழம் சின்னம் யாருக்கு சொந்தம் என உரிமை கோருவது தொடர்பாக சிவில் நீதிமன்றத்தை நாடுமாறு டெல்லி உயர் நீதிமன்றம் கூறிவிட்டது.

இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தைலாபுரத்தில் இன்று (டிசம்பர் 9) செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, “அப்பனுக்கும் பிள்ளைக்கும் இடையே இப்படி பிரச்சினை நடக்கிறது என்று தமிழ்நாடே ஆச்சரியமாக பார்க்கிறது.

இந்த கட்சிக்காக 46 ஆண்டுகளாக உழைத்தவரை அசிங்கமாக பேசுவதா? கண் தெரியவில்லை காது கேட்கவில்லை என்று கூறுவதா?

டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த போது அன்புமணி தரப்பு பொய் மூட்டைகளுடன் ஆஜரானது. அவர்கள் தேர்தல் ஆணையத்திடம் வழங்கியிருக்கும் ஆவணத்தில் எனது கையெழுத்து போலியாக போடப்பட்டுள்ளது.

எனது பெயரையோ, படத்தையோ அன்புமணி இனி பயன்படுத்தக் கூடாது. அவருக்கு அந்த உரிமை இல்லை. வேண்டுமென்றால் அன்புமணி தனிக்கட்சி தொடங்கட்டும். கட்சிக்காக நான் உழைத்ததை எல்லாம் சொல்லிக்காட்ட வேண்டியதுள்ளது. கட்சியின் பெயரை சொல்லவோ, சொந்தம் கொண்டாடவோ வேறு யாருக்கும் அதிகாரம் கிடையாது.

ஒட்டுக்கேட்பு கருவி தொடர்பாக புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

டெல்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், தற்போது பாமகவிற்கு தலைவர் யாருமில்லை என்றும், எனவே நிறுவனத் தலைவரான தனக்கு தேர்தல் முடிவுகளை எடுப்பதற்கான அதிகாரம் உள்ளது” என்றும் தெரிவித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com